ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை!

bbbடெல்லி: ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார். அவர் இன்று சொந்த ஊர் திரும்புகிறார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் (வயது 47).

இவர் ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, தமிழகத்தில் இலங்கை தமிழ் அகதிகளின் மறுவாழ்வுக்காக பணியாற்றி வந்தார்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை! 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் சென்று, அங்கு ஏசு சபையின் அகதிகள் சேவை திட்டத்தின் இயக்குனராக பணியாற்றினார். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளின் நல்வாழ்வுக்காக பாடுபட்டார்.

அவரது பணிகள் குறித்து அறிந்த தலிபான் தீவிரவாதிகள் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். அவர் ஹெராத் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோகாதத் என்ற கிராமத்தில், போர் அகதிகளின் குழந்தைகளுக்காக ஏசு சபையின் சார்பில் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தை பார்வையிடுவதற்காக கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி சில ஆசிரியர்களுடன் சென்றார். பள்ளிக்கூடத்தை பார்வையிட்டு விட்டு அங்கிருந்து திரும்பிய போது, திடீரென்று துப்பாக்கியுடன் வந்த தலீபான் தீவிரவாதிகள் அவரை கடத்திச் சென்று விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை அவர்கள் கேட்டுக்கொண்டனர். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியாரை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

பாதிரியாரை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தூதரக ரீதியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாதிரியார் கடத்தப்பட்ட 4 நாட்களில் தலீபான் தீவிரவாதிகள் 3 பேரை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஆனால் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

இந்த நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடி தனது ‘ட்விட்டர்’ வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். ‘‘ஆப்கானிஸ்தானில் கடத்திச்செல்லப்பட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் விடுதலை செய்யப்பட்ட தகவல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அவரை தொடர்பு கொண்டு பேசினேன்.8 மாதங்களுக்கு பிறகு அவர் பத்திரமாக விடுவிக்கப்பட்டது குறித்து எனது மகிழ்ச்சியை அவரது தந்தையிடம் தெரிவித்தேன்” என்று மோடி அதில் எழுதி இருக்கிறார்.

பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் விடுதலை செய்யப்பட்ட தகவலை அறிந்ததும் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். விடுதலை செய்யப்பட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று மாலை 6.55 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தார்.

அவருடன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிலரும் வந்தனர். விமான நிலையத்தில் ஏசு சபை சார்பில் பூங்கொத்து கொடுத்து அலெக்சிஸ் பிரேம்குமாரை வரவேற்றனர். அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.

விமான நிலையத்தில் அலெக்சிஸ் பிரேம்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், தன்னை விடுதலை செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதற்காக பாடுபட்ட இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் டெல்லியில் இருந்து இன்று சென்னை வழியாக ஊர் திரும்புகிறார்.

http://tamil.oneindia.com

TAGS: