கச்சத்தீவை மீட்கும் வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெறுவோம்: முதல்வர் பன்னீர்செல்வம்

paneerselvamகச்சதீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெறுவோம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து நேற்று திங்கட்கிழமை அவர் பேசியபோது:

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம், அவர்களை விடுவிக்க தொடர் முயற்சிகளை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதும், அவர்களின் படகுகள் இலங்கை அரசால், விடுவிக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.

கடந்த 4-ஆம் தேதியன்று, இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரியிடம், தூதரக ரீதியில் படகுகள் விடுவிக்கப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட, இலங்கை அதிகாரிகளை வற்புறுத்தும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கு ஏதுவாக, இலங்கை நீதிமன்றத்தில் வாதாட உரிய வழக்குரைஞர்களை நியமிக்கவும், அதற்கான செலவை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில், இந்திய தூதரகத்தால், வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டு, கடந்த 12-ஆம் தேதியன்று, படகுகளை இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கை நீதிமன்றங்களால், விடுவிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளை பொறுப்பேற்றுக் கொள்ள, மீன்வளத் துறை அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடிப் படகுகளை, தமிழகம் கொண்டு வருவதற்கான எரியெண்ணெய், உணவு மற்றும் பழுது நீக்கச் செலவு ஆகிய அனைத்து செலவினங்களையும், தமிழக அரசே ஏற்கும்.

பாக் ஜலசந்தியிலும், மன்னார் வளைகுடாவிலும் தமிழக மீனவர்கள் மீன்பிடிப் பிரச்சினை இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படலாம் என்பதால், இரு நாட்டு மீனவர்களிடையே வரும் மார்ச் 5-ஆம் தேதியன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த, மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமைவது, கச்சதீவு மீட்பு மட்டுமே என்பதால், மத்திய அரசிடம் இதனைத் தொடர்ந்து வற்புறுத்துவோம்.

கச்சதீவை மீட்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கில், சாதகமான தீர்ப்பை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

-http://www.tamilwin.com

TAGS: