தனியார் பெரு நிறுவனங்களின் நலன்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்ட மசோதாவை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முயற்சி செய்கிறது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டினார்.
விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்ட மசோதா இருப்பதாகக் கூறி தில்லியில் அண்ணா ஹசாரே, மேதா பட்கர் ஆகியோர் கடந்த இரு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், புதுச்சேரியில் உள்ள தேசிய மீனவர் பேரவை அமைப்பு தலைவர் இளங்கோ உள்ளிட்ட பலர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது வைகோ பேசியதாவது:
“ஏழை விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு “நிலம் கையகப்படுத்துதல்’ தொடர்பான அவசரச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரு முதலாளிகளுக்கு உதவும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன், “மக்களால், மக்களுக்காக, மக்களே ஆட்சி செய்வதுதான் அரசு’ எனக் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசோ கார்ப்ப்ரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அவசர சட்ட மசோதாவை மத்திய அரசு குப்பையில் எறியவில்லை எனில் மோடியின் அரசை, மக்கள் தூக்கி எறிந்து விடுவர். இச்சட்டத்தை நிறைவேற்றி ஏழை விவசாயிகளின் நிலங்களைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் அரசு ஈடுபடத் திட்டமிடுகிறது. விவசாயிகளின் ஒப்புதலின்றி விவசாய நிலத்தை கையகப்படுத்தலாம் என்ற நரேந்திர மோடி அரசின் திட்டத்தை ஒரு போதும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றார் வைகோ.
மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: கேஜரிவால் எச்சரிக்கை
ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு விரோதமாக மத்திய அரசு செயல்பட்டால், அதற்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எச்சரித்தார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் ஹசாரே போராட்டப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது மேடையில் அமர்ந்திருந்த ஹசாரேவை பார்த்த கேஜரிவால் தனது தலையை தாழ்த்தி வணக்கம் தெரிவித்தார். அங்கிருந்த ஹசாரே ஆதரவாளர்கள் சிலர் கேஜரிவால் மேடையில் அமரக் கூடாது என்று கோஷமிட்டனர். இதனால், பார்வையாளர் பகுதியில் இருந்த கேஜரிவாலை சில நிமிடங்கள் கழித்து தன்னுடன் அமர ஹசாரே அனுமதித்தார்.
இதைத் தொடர்ந்து, அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் நிறைவேறினால் அது மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மனைகளை விற்பனை செய்யும் இடைத்தரகருக்கு ஒப்பானதாகக் கருதப்படும். யாருடைய நிலத்தையும் கட்டாயப்படுத்தி அபகரிக்க எந்த அரசுக்கும் உரிமை இல்லை. அப்படியே நிலத்தை வாங்குவதாக இருந்தால், சந்தை விலையில் அந்த நிலத்தை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு தனது நோக்கத்துக்காக மக்கள் மீது புல்டோசர்களைக் கொண்டு இடிக்க முற்பட்டால் அந்த அரசாங்கத்தின் மீது மக்கள் புல்டோசரை ஏற்றி பாடம் புகட்டுவார்கள்.
இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அண்ணா ஹசாரேவுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம். தில்லி தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் எனது குருவான அண்ணா ஹசாரே பங்கேற்று 10 நிமிடமாவது பேசி அறிவுரை வழங்கினால் அது அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும்’ என்றார் அரவிந்த் கேஜரிவால்.
லோக்பால் சட்டத்தை கொண்ட வர வலியுறுத்தி தில்லியில் 2011ஆம் ஆண்டு அண்ணா ஹசாரே போராட்டம் நடத்தினார். அப்போது ஹசாரேவின் வலது கரம் போல கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் இருந்தனர். அதன் பிறகு கேஜரிவால் அரசியல் கட்சியைத் தொடங்கியதால், கேஜரிவாலை சந்திப்பதை ஹசாரே தவிர்த்தார். இந்நிலையில், தில்லி முதல்வராக மீண்டும் பதவியேற்ற கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஹசாரேவின் போராட்டத்தில் பங்கேற்று அவருடன் ஒரே மேடையில் அமர்ந்தார்.
-http://www.dinamani.com