திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்திரிக்கையாளர் மருதம் கோகி எழுதிய, ’’தேவை மரபு – மாறா மனிதர்கள்’’. மீத்தேன் திட்டம், பாழ்படும் நிலம், போராட்ட களம். மீத்தேன் எடுப்பதால் எந்த அளவுக்கு பாதிப்புகள் வரும் அதனால் விவசாயம் மட்டுமின்றி விவசாயம் சார்ந்த அத்தனை பேரும் பாதிக்கப்படுவார்கள் என்ற புத்தகம் அறிமுக விழாவை மன்னார்குடி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
புத்தகத்தை முன்னால் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சந்துரு அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.
அவர், ’’மீத்தேன் அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுவிட்டார்கள், மாநில அரசும் அந்த திட்டம் இனி வராது என்று சொல்வதை நம்பக் கூடாது. உரிமம் காலாவதி என்றும் தமிழக அரசு சொல்கிறது. இரண்டும் தவறு. மக்களை திசைதிருப்பி கொண்டுவர இருப்பார்கள். இந்த மீத்தேன் திட்டம் வந்தால் 670 ச.கி.மீ வரை பாதிப்பு ஏற்படும்.
1794 ல் ஆங்கிலேயர் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை வைத்துக் கொண்டு இருந்தோம். அதனால் எந்த நேரத்திலும் யாருடைய நிலத்தையும் பறிக்கும் நிலை இருந்தது.
ஆனால், காங்கிரஸ் அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல திட்டத்தை 2013 ம் ஆண்டு கொண்டு வந்திருக்கிறது. நில உரிமையாளர் அனுமதி இல்லாமல் கையளவு நிலம் கூட கையகப்படுத்த முடியாது. இப்ப அந்த சட்டத்தை திருத்த தான் மத்திய அரசு முயற்சிக்கிறது.
மீத்தேன் திட்டம் வந்தால் சொந்த நாட்டிலேயே புலம் பெயர வேண்டியது வரும். இது போன்ற பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தை நம்ப வேண்டாம். ஏனென்றால் நீதிமன்றம் ஆய்வு கமிஷன் அமைக்கும். அந்த கமிஷன் தனது ஆய்வு அறிக்கையில் இந்த திட்டத்தால் எந்த பாதிப்பு வராது என்று சொல்லும். அதை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கும்.
நம்மை காக்க நாம் தான் முயல வேண்டும். எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது’’ என்று பேசினார்.
-http://www.nakkheeran.in