கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவததைத் தடுக்கும் வகையில் முற்றுகையிடச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழக விவசாயிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மேகதாதுவில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் விவசாய அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதை தடுக்க மேகதாதுவில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று காவிரி உரிமை மீட்பு குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் நேற்று இரவு முதலே எல்லையான தேன்கனிக்கோட்டையில் குவிந்தனர். தேன்கனிக்கோட்டையில் இருந்து கர்நாடக மாநிலம் மேகதாது நோக்கி சென்று முற்றுகை போராட்டம் நடத்துவது என்பது விவசாயிகளின் திட்டம்.
ஆனால் இப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இத் தடையை மீறினால் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில் பகல் 1 மணியளவில் மேகதாதுவை முற்றுகையிட புறப்பட்ட விவசாயிகள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் வந்திருந்த சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
மறுமலர்ச்சி தி.மு.க., தமிழ்த் தேசியப் பேரியக்கம், விவசாய சங்கங்கள் என பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.