சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 105 படுகொலைகள் நடந்துள்ள காரணத்தினால் பாதுகாப்புக்கு மத்திய அரசிடம் துணை ராணுவத்தை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் 105 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில்மட்டும் ஒரே இனத்தைச் சேர்ந்த 87 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சமூகத்தினர் கூலி ஆட்களை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 105 படுகொலைகளில் கருணை கொலைகளும் அடங்கும்.
அரசும், காவல்துறையும் படுகொலைகளை தடுக்க தவறிவிட்டன. தென் மாவட்டங்களில் அமைதி திரும்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென் மாவட்டங்களில் பாதுகாப்புக்கு மத்திய அரசிடம் துணை ராணுவத்தை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.