பிரிவினைவாதத்தை அரசு அனுமதிக்காது: நரேந்திர மோடி

  • modi_gandhi_001ஹுரியத் பிரிவினைவாத அமைப்புத் தலைவர் மஸரத் ஆலமை விடுதலை  செய்தது தொடர்பாக மத்திய அரசிடம் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், பிரிவினைவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில், தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2008, 2010ஆம் ஆண்டுகளில் மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்களில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தப் போராட்டங்களைத் தூண்டிவிட்டதாக மஸரத் ஆலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற முஃப்தி முகமது சயீது தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி அரசு, மஸரத்தை இரு தினங்களுக்கு முன்பு விடுதலை செய்தது. ஜம்மு-காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கைக்கு, பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மக்களவையில் திங்கள்கிழமை இந்த விவகாரத்தை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியபோது, “ஆலமை விடுதலை செய்திருப்பதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் அரசில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது. ஆகையால், பாஜகவுக்கும் இதில் பங்குண்டு’ என்று குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு அளித்த விளக்கத்தால் எதிர்க்கட்சி உறுப்பினர் சமாதானமடையவில்லை. அவையில் தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்தனர். இதனால், மக்களவை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிரதமர் விளக்கம்: அதைத் தொடர்ந்து மக்களவை மீண்டும் தொடங்கியதும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். இதுபோன்ற நடவடிக்கையை, நாடாளுமன்றம் ஒருமித்த குரலில் கண்டிக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, நாட்டுக்கும், மக்களவைக்கும் ஓர் உறுதியளிக்கிறேன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், எது நடந்ததோ (மஸரத் ஆலம் விடுதலை) அதுகுறித்து, மத்திய அரசுடன் மாநில அரசு கலந்தாலோசிக்கவில்லை. மத்திய அரசிடம் அதுகுறித்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது.

பிரிவினைவாதத் தலைவர்களை ஆதரிப்பவர்கள், சட்டத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நாம் ஒரே குரலில் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். வரும் நாள்களில், இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுப்போம். நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க நாங்கள் உறுதிபூண்டிருக்கிறோம்.

மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக மௌனம் காப்பதாக  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த விவகாரத்தில், பாஜக மௌனம் காக்க எந்தக் காரணமும் இல்லை. ஜம்மு-காஷ்மீரில் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் (ஜனசங்கத்தின் நிறுவனர்) உயிரைத் தியாகம் செய்த கட்சி, பாஜக.

“தேசப்பற்று குறித்து பாடம் நடத்த வேண்டாம்’: தேசப்பற்று குறித்து, பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் பாடம் நடத்த வேண்டாம். இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசிடம் கூடுதல் விளக்கம் கேட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு, அதுகுறித்து நாடாளுமன்றத்திடம் நாங்கள் தெரிவிப்போம்.

பிரிவினைவாத அமைப்பின் தலைவரை விடுதலை செய்திருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் எனது அரசு சகித்துக் கொண்டிருக்காது என்றார் மோடி.

மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது-ராஜ்நாத்: இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

மஸரத் ஆலம் விடுதலை தொடர்பாக மத்திய அரசு கேட்ட விளக்கத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு பதில் அளித்துள்ளது. அந்தப் பதிலில், மஸரத் ஆலம் மீது கொலை முயற்சி உள்பட 27 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தன் மீதான அனைத்து வழக்குகளிலும் மஸரத் ஆலம் ஜாமீன் பெற்று விட்டதாகவும் மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.

மாநில அரசின் பதிலில் ஒரு பகுதி திருப்தியளிக்கவில்லை. அதுகுறித்து மாநில அரசிடம் மத்திய அரசு கூடுதல் விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில், ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுக்கத் தயங்காது என்றார் அவர்.

எதிர்க்கட்சிகள் அதிருப்தி: மஸரத் ஆலம் விடுதலை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த விளக்கத்துக்கு, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகிய எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “மத்திய அரசிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்; அப்படியென்றால், ஜம்மு-காஷ்மீர் அரசில் இருந்து பாஜக விலகுமா? அல்லது ஆலமை மீண்டும் சிறைக்கு அனுப்புமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி பேசுகையில், “ஜம்மு-காஷ்மீர் அரசில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது. ஆகையால் ஆலம் விடுதலை விவகாரத்தில் இருந்து பாஜக தப்ப முடியாது’ என்றார்.

அதிமுக வலியுறுத்தல்: நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் வேணுகோபால் பேசுகையில், “மாநிலங்களுக்கு வழங்கப்படும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, பிரிவினைவாதிகளை விடுதலை செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜம்மு-காஷ்மீர் கூட்டணி அரசில் இருந்து பாஜக வெளியேறி, மறு தேர்தலைச் சந்திக்க வேண்டும்’ என்றார்.

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு: இதே பிரச்னையை மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை முதலில் 15 நிமிடத்துக்கும், பிறகு நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. ஆகையால், சுரங்கங்கள், கனிமங்கள் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசால் தாக்கல் செய்ய முடியவில்லை.

-http://www.dinamani.com

TAGS: