புதுமாப்பிள்ளை தேன் நிலவுக்கு செல்வது போல் மோடி இலங்கை விஜயம்: சீமான்

mody_semanஇந்திய பிரதமர் தமிழர்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றமை இந்திய வாழ் தமிழ் தேசி இனத்தினருக்கு இழைக்கும் துரோகம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை குறித்து யுத்த குற்ற விசாரணை நடத்துமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய பிரதமர் இலங்கைக்கு செல்வது இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இனப்படுகொலை நிகழ்த்திய நாடு எனும் சர்வதேசத்தின் பார்வையை மாற்றும் செயலாகவே இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் எனவும், யுத்தத்தின் போது வெறுமனே 5 ஆயிரம் பேரே உயிரிழந்துள்ளார்கள் எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதுடன்,

80 ஆயிரம் விதவைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவுவோம் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவ்வாறெனில் 80 ஆயிரம் கணவர்கள் கொல்லப்பட்டது இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் தானே, அவர்களும் அவர்களின் குழந்தைகளும் கொலை செய்யப்பட்டது யுத்தத்தில் தானே, அவையெல்லாம் கொலை பட்டியலில் உள்ளடக்கப்படுவதில்லையா என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

சிறிதளவும் மனிதாபிமானமற்ற முறையில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமருடனான சந்திப்பின் போது உண்மைகளை வெளிக்கொணர்ந்து விட போகிறாரா?

இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற சிங்கள அரசாங்கத்திற்கு இந்தியா உதவியது என பிரதமர் ரணில் கூறியுள்ளாரே அவ்வாறெனில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எம் இனத்தின் உயிரிழப்பை ஏற்று கொள்கிறாரா என சீமான் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை தட்டிக் கெட்கவோ, தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு நியாயம் கேட்கவோ துணியாத இந்திய பிரதமரா தமிழ் மக்களை சந்தித்து பேச போகிறார்.

இராணுவத்தினரின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ள மக்கள் எவ்வாறு இந்திய பிரதமரிடம் வெளிப்படையாக பேச முடியும்,

மேலும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து கொடுக்காமல் இந்திய பிரதமரை அழைத்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்வைக்கவே இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என வடமாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இந்திய பிரதமரின் நிலைப்பாடு என்ன?

இலங்கையின் இனப்படுகொலை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, ஈழத்தமிழரின் மீள்குடியேற்றம் உள்ளிட்டவை குறித்து இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போதே பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாமே,

புதுமாப்பிள்ளை தேனிலவுக்காக ஊர் ஊராக சுற்றுவதை போல் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதே கடமையாக கருதும் இந்திய பிரதமர் அதற்காகவா இலங்கைக்கு செல்கிறார் என எண்ணத் தோன்றுவதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.

தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியை பெற நாங்கள் போராடும் சந்தர்ப்பத்தில் தெற்காசிய வலயத்தில் வலிமை மிக்க ஒரு வல்லாதிக்கத்தின் பிரதமர் மோடி இலங்கைக்கு செல்வது இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவு வழங்குவது போலாகிவிடும் என சீமான் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச தமிழ் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி இலங்கைக்கு செல்லும் இந்திய பிரதமரின் பயணத்தை நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேலும் தெரிவித்துள்ளார்.

மோடியின் இலங்கை விஜயத்தால் பயனில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை விஜயத்தை இரத்து செய்ய வேண்டும்.

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்லையை தாண்டும் மீனவர்களை சுடுவதற்கு எமது சட்டத்தில் அனுமதியுள்ளது என அண்மையில் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இலங்கை பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவிப்பதற்கு அவருக்கு எங்கிரந்து துணிச்சல் வந்தது என அவர் கேள்வியெழுப்பியுள்ளதுடன்,

இந்திய பிரதமர் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர் தெரிவித்துள்ள கருத்தில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக இளங்கோவன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தினால் எவ்வித நன்மையும் ஏற்பட போவதில்லை எனவே அவர் தனது இலங்கை விஜயத்தை இரத்து செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளதுடன்,

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய போவதாக இந்திய இலங்கை அரசுக்கு கடுமையான முறையில் எச்சரிக்க வேண்டும் எனவும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரியுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: