நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு: மன்மோகன் சிங்குக்கு நீதிமன்றம் சம்மன்

  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக் உள்ளிட்ட 6 பேரையும் ஏப்ரல் 8ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை (சம்மன்) அனுப்ப, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ஒடிஸா மாநிலம், தலபிராவில் உள்ள 2ஆவது நிலக்கரிச் சுரங்கம் 2005ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், இந்த உத்தரவை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்தது.

இதுதொடர்பான வழக்கு, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பரத் பராசர் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தெரிவித்ததாவது:

டாக்டர் மன்மோகன் சிங், குமாரமங்கலம் பிர்லா, பி.சி. பரேக், எம்.எஸ். ஹிண்டால்கோ நிறுவனம், சுபேந்து அமிதாப், டி. பட்டாச்சார்யா (ஹிண்டால்கோ நிறுவனத்தின் அதிகாரிகள்) ஆகியோர் மீது இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 120பி, 409 ஆகிய பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் (பிசிஏ) 13(1)சி, 13(1) (டி) (3) ஆகிய பிரிவுகளின் கீழும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்ற முறையில் ஏப்ரல் 8ஆம் தேதி அவர்கள் 6 பேரும் நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப உத்தரவிடுகிறேன் என்றார் நீதிபதி. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவர்கள் அனைவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

வழக்கு விவரம்: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வசம் நிலக்கரித் துறை அமைச்சகம் 2005ஆம் ஆண்டு இருந்தது. அந்தக் காலகட்டத்தில், ஒடிஸா மாநிலம், தலபிராவில் உள்ள 2ஆவது நிலக்கரிச் சுரங்கம், குமாரமங்கலம் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ, தலபிராவில் உள்ள 2ஆவது சுரங்கம் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டதை கண்டறிந்தது. இதையடுத்து, பி.சி. பரேக், பிர்லா, ஹிண்டால்கோ நிறுவனம் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத நபர்களுக்கு எதிராக இந்தியத் தண்டனைவியல் சட்டத்தின் 120-பி பிரிவு, ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

இதனிடையே, இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதுதொடர்பாக தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், அவரது பதவிக்காலத்தில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய டி.கே.ஏ. நாயர் (முன்னாள் முதன்மைச் செயலர்), பி.வி.ஆர். சுப்பிரமணியம் (முன்னாள் தனிச் செயலர்) உள்ளிட்ட அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.

வாய்மையே வெல்லும்

நீதிமன்ற அழைப்பாணைதொடர்பாக மன்மோகன் சிங் கூறியதாவது:

நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருப்பது வருத்தமளிக்கிறது. இருப்பினும், இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். சட்ட விசாரணைக்குத் தயாராக இருப்பதாக நான் எப்போதும் தெரிவித்து வந்துள்ளேன். வாய்மையே வெல்லும் என்பதில் உறுதியாக உள்ளேன். மேலும், என் மீதான வழக்கை அனைத்து உண்மைகளுடனும் சேர்த்து முன்னெடுத்துச் செல்வதற்கு கிடைத்த வாய்ப்பாக இதை (அழைப்பாணை) கருதுகிறேன். எனக்கு இதில் தொடர்பில்லை என்பதை நிரூபிப்பேன் என்றார்.

“வியப்பளிக்கிறது’

தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தனக்கு அழைப்பாணை அனுப்பியிருப்பதற்கு, பி.சி. பரேக் வியப்பளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஹைதராபாதில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீதிமன்றம் தனக்கென்று சில விதிகளுக்கு உள்பட்டு செயல்படுகிறது. அதுகுறித்து கருத்துத் தெரிவிப்பது சரியாக இருக்காது. இந்த விவகாரத்தில், அரசியல் தலையீடு எதுவும் இல்லை’ என்றார் அவர்.

“குற்றவாளியாகமாட்டார்’

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தில்லி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருப்பதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிட மாட்டார் எனக் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறியதாவது: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என வலியுறுத்தியவர் மன்மோகன் சிங். அதை பாஜக ஆளும் மாநிலங்கள் தடுத்தன. உண்மையில், நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்கள் அனைத்தும், காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களாகும் என்றார்.

சம்மன் அனுப்பப்படும் 2ஆவது முன்னாள் பிரதமர்

குற்ற வழக்கில், நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பப்படும் 2ஆவது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆவார்.

1996ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் 3 எம்.பி.க்களுக்கு கையூட்டு வழங்கியது உள்பட 3 வழக்குகளில், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த வழக்குகளில் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர், நீதிமன்றத்தால் அவருக்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டது. எனினும், அந்த வழக்குகளில் இருந்து நரசிம்ம ராவ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டார்.

அதன்பிறகு, மன்மோகன் சிங்குக்கு தற்போது தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: