வறுமையின் பிடியில் மூத்த காங்கிரஸ் பிரமுகர் கிள்ளிவளவன்- 5 லட்சம் நிதியுதவி அளித்து ஜெ. ஆறுதல்

Jayalalithaaசென்னை: தமிழகத்தில் வறுமையில் வாடும் மூத்த காங்கிரஸ் பிரமுகர் கிள்ளிவளவனுக்கு மாதம் ரூபாய் 5 ஆயிரம் கிடைக்க அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணாவோடு நெருங்கிப் பழகியவரும், பல்வேறு பணிகளில் அண்ணாவுக்கு உறுதுணையாக விளங்கியவரும், அண்ணாவின் மறைவுக்கு பிறகு பல அரசியல் தலைவர்களிடம் நெருங்கிப் பழகியவரும், காங்கிரஸ் இயக்கத்தில் நீண்ட காலம் பணியாற்றியவருமான, 90 வயதுடைய கிள்ளிவளவன் அவர்களை முதுமையும், ஏழ்மையும் வாட்டி வரும் சூழலில் நோயுற்று, கவனிப்பார் இன்றி தனிமையில் தவித்து வருகின்றார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமுற்றார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் வாழ்வில் வழி இழந்து வாடி நிற்கும் மனிதர்களின் துயரங்களைப் பற்றிய செய்தி அறிந்த உடனே அவர் எவர் என்றும் பாராமல், எந்த இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற பாரபட்சம் காட்டாமல் மனிதாபிமானம் என்ற மாண்பின் அடிப்படையில் அவர்தம் துயர் களைய உடனடி உதவிகளை வழங்கி வருகின்றவர் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

அவ்வடிப்படையில், கிள்ளிவளவனின் துயர் துடைத்திடும் வகையில் அவருடைய பெயரில் 5 லட்சம் ரூபாயை நிலை வைப்பில் செலுத்தி அதில் இருந்து வரும் வட்டித்தொகையில் அவருடைய அன்றாடச் செலவுகளை செய்துகொள்வதற்கு ஏதுவாக மாதா, மாதம் பணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ததோடு அவரது உடனடி செலவிற்காக 5 ஆயிரம் ரூபாயையும் வழங்குமாறு ஆணையிட்டுள்ளார்..

நிதியுதவியினைப் பெற்றுக்கொண்ட கிள்ளிவளவனும் அவரது குடும்பத்தினரும் தங்கள் சூழ்நிலையை அறிந்து உடனடியாக உதவி செய்த ஏழை எளிய மக்களின் கண்கண்ட காவல் தெய்வமாய் விளங்குகின்ற அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கருணை உள்ளத்தை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.com

TAGS: