சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு வரும் 15ம் தேதி முதல் தடை விதிக்கப் பட்டிருப்பதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியிருப்பதாவது :-
“மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013 என்ற சட்டம் 15-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு அறிவிக்கிறது.
அதன்படி வரும் 15-ம் தேதியில் இருந்து எந்தவொரு தனிநபரோ, உள்ளாட்சி அமைப்போ, முகமையோ தங்களின் ஊழியரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மனிதக் கழிவுத் தொட்டியை (செப்டிக் டாங்க்) கழுவும் ஆபத்தான பணிக்கு பயன்படுத்தக் கூடாது” இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பணீந்திர ரெட்டி அளித்த பேட்டியில், “மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிய நடவடிக்கைகள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்தே கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தனி நபர்களும் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டாங்கில் இனி மனிதர்களை இறக்கிவிட்டு சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளக் கூடாது.
இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இயந்திரங்கள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். மேலும் ஒவ்வொரு வீடுகளிலும் செப்டிக் டாங்க், அரசால் நிர்ணயிக்கப்பட்ட முறையில் கட்டப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்வதற்காக சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்படி கட்டப்பட்டால்தான் அதில் விஷ வாயு தேங்காமல், இயற்கையாக வெளியேறிவிடும். முறைப்படி அமைக்காவிட்டால், விஷ வாயு உருவாகி, அதனால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது. எனவே முறைப்படி செப்டிக் டாங்க் கட்டாமல் விட்டிருந்தால் அவர்களுக்கு நோட்டீசு பிறப்பிக்கப்படும். பின்னர் அதை முறைப்படி கட்டுவதற்கான உத்தரவிடப்படும்” என்றார்.
மனித கழிவை மனிதனே அள்ள தடை விதிக்கப்பட்டது.
.இது தந்தை பெரியாரின் ‘சுயமரியாதை’ போராட்டத்தின் வெற்றி. திராவிடத்தின் வெற்றி. இந்த வெற்றியின் பெருமை தந்தை பெரியாருக்கு மட்டுமே உரியது.
இந்த தொழிலை இவன்தான் செய்ய வேண்டும் என்று வகுத்த கேடுகெட்ட வர்ணாசிரமத்தின் அழிவு தந்தை. பெரியாரின் பகுத்தறிவு மண்ணிலிருந்து தொடங்கட்டும்.
மனித கழிவை மனிதனே அள்ளும் அவலத்தை துடைதொழிப்பதில் முனைப்புடன் செயல்படவிருக்கும் தமிழக அரசுக்கு மனிதாபமான மிக்க உலக மக்கள் சார்பில் நன்றி! மனித நேயம் செத்துவிடவில்லை என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம். சமுதாயத்தை சின்னபின்னமாக்கிக் கொண்டிருக்கும் கணக்கிலடங்கா எற்ற தாழ்வுகளை சரிசெய்ய வேண்டும் இத அரசு.