நடுரோட்டில் உயிருக்கு போராடிய பெண்: புகைப்படம் எடுத்த பொதுமக்கள்

cell_phone_001மேற்குவங்க மாநிலத்தில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி கொண்டிருந்த போது, அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு உதவி எதுவும் செய்யாமல், அவரை புகைப்படம் மட்டும் எடுத்து சென்றுள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த அப்ஸா காத்தூன் (28) என்ற பெண்மணி, வெள்ளிக்கிழமை காலை தனது மகள்கள் ஹாஷா மற்றும் அக்ஷா ஆகியோரை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஏஜேசி போஸ் சாலையில் அவர் நடந்து செல்கையில், புனித ஜான் தேவாலயம் முன்பு தனியார் பள்ளி பேருந்து ஒன்று அரசு பேருந்தை முந்த முயன்றதில் அப்ஸாவின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அப்ஸா சாலையில் விழுந்து வலியில் துடித்துள்ளார். ஆனால் சாலையில் சென்ற மக்கள் அந்த பெண்மணியை தங்கள் கைப்பேசியால் புகைப்படம் எடுத்தனரே தவிர யாரும் உதவிட முன்வரவில்லை.

அப்ஸாவின் வீடு அந்த சாலையின் அருகில் உள்ள பகுதியில் இருந்ததால் அவர் விபத்தில் சிக்கியது தெரிந்து அவரது அக்கம்பக்கத்து வீட்டினர் ஓடிவந்து சுமார் 25 நிமிடங்களாக சாலையில் உயிருக்கு போராடிய அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சையின் போது, தனது கணவரின் பெயர் மற்றும் கைப்பேசி எண்ணை அளித்த அப்ஸா பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதையடுத்து அப்ஸாவின் சகோதரர், மருத்துவமனை முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் அப்ஸா இறந்ததாக புகார் தெரிவித்தார்.

இந்த புகாருக்கு பதிலளித்த மருத்துவர்கள், தாங்கள் முறையான சிகிச்சை அளித்ததாகவும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போதே மோசமான நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், சாலையில் விபத்துக்குள்ளான பெண்மணிக்கு பொதுமக்கள் யாரும் உதவி செய்யாமல், புகைப்படம் எடுத்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: