இலங்கை தமிழர்கள் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்திய பிரதமர் மோடி: பொன்.ராதாகிருஷ்ணன்

modi_sirisena_001பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம், இலங்கை தமிழர்கள் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் அவரது சுற்றுப்பயணம் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்திய பிரதமர் ஒருவர் 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை சென்றது மட்டுமல்ல தமிழர் பகுதிக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற சாதனையையும் மோடி ஏற்படுத்தி உள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தில் அந்த நாட்டு அதிபர், பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றிய மோடி இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தமிழர்கள் பகுதிக்கு சென்ற மோடி தமிழர்கள் இந்தியாவை நம்பலாம் என்ற வாக்குறுதியையும் அளித்துள்ளார்.

இந்திய நிதியில் கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை தமிழர்ளுக்கு ஒப்படைத்துள்ளார். மேலும் 47 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு நில உரிமையும், காவல்துறை அதிகாரமும் வரும் என்பதற்கு முன்னறிவிப்பாக இது அமைந்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த முன்னாள் அதிபர் ராஜபக்சேவை தண்டிக்க பல வழிகள் உள்ளன.

அவர் இன்று தான் தண்டிக்கப்பட்டதாக உணர்வதோடு, தனது தோல்விக்கு இந்தியாதான் காரணம் என்று கூறுகிறார்.

இலங்கை தமிழர்கள் பெயரை சொல்லி அரசியல் நடத்துபவர்கள், கூக்குரலிட கூடியவர்கள் ராஜபக்சேவின் அறிக்கையையும், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அறிக்கையையும் படித்து தெளிவது அவசியம்.

மேலும், இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மோடி புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளார் என்றும், நிச்சயமாக இது இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: