மாநிலங்களவையில் நிலம் கையக மசோதாவை எதிர்க்க வேண்டும்: எதிர்க் கட்சிகளுக்கு ஹசாரே வேண்டுகோள்

மாநிலங்களவையில் நிலம் கையக மசோதா தாக்கல் செய்யப்படும்போது அதை நிறைவேற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு எதிர்க் கட்சிகளை சமூக சேவகர் அண்ணா ஹசாரே கேட்டுக் கொண்டுள்ளார்.

நிலம் கையக மசோதா தொடர்பாக முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளதாக அவரது உதவியாளர் விநாயக் பாட்டீல், தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார். அந்தக் கடிதத்தில் ஹசாரே கூறியிருப்பதாவது:

கடுமையான பெரும்பான்மை பலத்தோடு மக்களவையில் நிலம் கையக மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் விவசாயிகளுக்கு விரோதமான பல்வேறு ஷரத்துகள் உள்ளன. அடுத்ததாக மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் அங்கு அரசுக்குப் பெரும்பான்மை இல்லை. எனவே அங்கு அது நிறைவேறாது.

மாநிலங்களவையில் மசோதா அறிமுகம் செய்யப்படும்போது அதை கடுமையாக எதிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் ஹசாரே கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து, ஹசாரேவின் மனு ஒன்றை அவர்களிடம் அளிப்பதற்காக விநாயக் பாட்டீல், திங்கள்கிழமை தில்லி வந்தார். இது தொடர்பாக அவர் கூறியபோது, “”காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெ கௌடா ஆகியோரை நாங்கள் சந்தித்து ஹசாரேவின் கோரிக்கையை முன்வைத்துள்ளோம்” என்றார்.

-http://www.dinamani.com

TAGS: