மீண்டும் மீண்டும் “சுடும்” ரணில்… இந்தியா அமைதி காப்பது ஏன்?

ranil_wickramasingheஇலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சுடுவோம் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆனால் இதற்கு இந்தியத் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கண்டனமும் செலுத்தப்படாதது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், அத்துமீறி தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும், படகுகளை சேதப்படுத்துவதும், அவற்றை கையக்கப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை கடற்பகுதிக்குள் தமிழக மீனவர்கள் வந்தால், அவர்களை சுஅதிகாரம் தங்களுக்கு உள்ளது என்று கூறியிருந்தார்.மீண்டும் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கேவின் கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இலங்கை போன்ற சிறிய நாடுகளெல்லாம் மிரட்டும் அளவுக்கு பாஜக ஆட்சியில் வெளியுறவுக் கொள்கைகள் தரம் தாழ்த்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த சுஷ்மா சுவராஜ், இத்தகைய கருத்துக்களுக்காக தன்னிடம் ரணில் வருத்தம் தெரிவித்ததாக விளக்கமளித்திருந்தார். இருப்பினும் ரணில் பேச்சுக்கு அப்போது மத்திய அரசு பகிரங்கமாக எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. சுட்டால் சுட்டுக்கோங்க என்பது போல இருந்து விட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ‘தமிழக மீனவர்களை சுட்டு கொலை செய்ய தங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என ரணில் விக்கிரமசிங்கே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொலைக்காட்சி ஒன்றிற்கு ரணில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் வெற்றிக்கரமாக அமைந்தது. எங்கள் நாட்டின் கடல் எல்லைக்கு உட்பட்ட எந்த பகுதியிலும் அத்துமீறி யாரேனும் நுழைந்தால், அவர்களை சுடும் உரிமை இலங்கை கடற்படைக்கு உண்டு. இது ஒன்றும் புதிதல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.

ரணிலின் இந்த பேட்டி தமிழக மீனவர்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஓரிரு தினங்களுக்கு முன்பு இலங்கை சென்று திரும்பிய நிலையில் ரணில் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பித்தக்கது.

இந்த முறையும் மத்திய அரசுத் தரப்பிலிருந்து ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக வழக்கம் போல அமைதி காக்கின்றனர். இலங்கை தூதரை அழைத்து விளக்கம் கேட்கவில்லை. கண்டனம் தெரிவிக்கவில்லை.

தமிழக மீனவர்களைப் போலவே இலங்கை மீனவர்களும் தொடர்ந்து நமது எல்லைக்குள் புகுந்து மீன் பிடிக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை இதுவரை ஒருமுறை கூட இந்தியப் படை தாக்கியதில்லை. மாறாக பத்திரமாக கூட்டி வந்து தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கின்றனர். நியாயப்படி பார்த்தால், ரணில் விக்கிரமசிங்கே போல மோடியும் பதிலுக்குப் பேசியிருக்க வேண்டும். ரணில் போல பாகிஸ்தான் பிரதமர் பேசியிருந்தால் மோடி பேசாமல் இருந்திருப்பாரா.. அல்லது மத்திய அரசுதான் அமைதியாக இருந்திருக்குமா…?

பாஜக அரசின் இந்த இரட்டை நிலை தமிழக மக்கள் மத்தியிலும், மீனவர்களிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ரணில் பேசுவதை ஏன் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

http://tamil.oneindia.com

TAGS: