கிரானைட் புகார்களை விசாரிக்க 19 பேர் கொண்ட குழு அமைப்பு: 9ம் கட்ட ஆய்வுக்கு சகாயம் தயார்!

SAGAYAM_2248678f

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான அதிகாரிகள் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இது தொடர்பான விசாரணையின் போது கிரானைட் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள் சகாயத்திடம் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதாரிக்கு, சகாயம் பரிந்துரை செய்தார்.  அதன் அடிப்படையில் கூடுதல் போலீஸ் உதவி கண்காணிப்பாளர் ஓம்பிர காஷ்மீனா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜான் பிரிட்டோ, அப்துல்காதர், குமாரவேல்பாண்டியன் மற்றும் 10 சப்–இன்ஸ்பெக்டர்கள், 5 தலைமை காவலர்கள் அடங்கிய 19 போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழுவினர், மதுரை கிழக்கு தாலுகாவிற்கு உட்பட்ட புதுதாமரைப்பட்டி, சிவலிங்கம், இடையப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த புகார் மனு கொடுத்த 30 பேருக்கு சம்மன் அனுப்பினர். பின்னர் அவர்களிடம் இந்த குழுவினர் விசாரணை நடத்தினார்கள்.

ஜாங்கிட் நகரில் கிரானைட் அதிபர்கள் ஆக்கிரமித்துள்ள நிலம் தொடர்பாக போலீசார் அளித்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை நடந்தது. ஓய்வு பெற்ற போலீசார், தற்போது பணியில் உள்ள போலீசார் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் இக்குழுவின் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்த போலீஸ் குழுவினர் விசாரணை நடத்தும்போது புகார்களுக்குள்ளான எதிர்தரப்பினரையும் வரவழைத்து அவர்களிடமும் விளக்கம் பெறப்படுகிறது. புகார்கள் குறித்து உண்மை இருக்கும் பட்சத்தில், எதிர் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் விசாரிக்க வேண்டிய மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தும் பணியில், இந்தக் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை குழுவுக்கான கால அவகாசத்தை சென்னை ஐகோர்ட்டு, மேலும் 8 வாரம் நீட்டித்துள்ளது. இதற்காக சகாயம் மதுரை வருகிறார்.

இதுவரை விசாரணை கமிஷன் கேட்ட கேள்விகளுக்கு பதில் தராத அரசுத்துறைகளிடம் விரைவாக பதில் தர சகாயம் மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளார்.  இந்த 9–ம் கட்ட ஆய்வில் சகாயம் முழுமையாக அலுவலகத்தில் அமர்ந்து அறிக்கை தயாரிப்பு பணியில் தீவிரம் காட்டுவார் என்று கூறப்படுகிறது.

-http://www.nakkheeran.in

TAGS: