மறைமுகப் போரைக் கைவிட வேண்டும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மறைமுகப் போர் தொடுப்பதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதை நிறுத்தினால் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்புச் சூழல் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத ஒழிப்பு குறித்த சர்வதேசக் கருத்தரங்கம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை தொடங்கியது.

மூன்று நாள்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் சட்டவிரோத ஊடுருவல், எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

இதன் தொடக்க விழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நாட்டின் எல்லைக்கு அப்பால் திட்டமிடப்படுகின்றன. பயங்கரவாதத் தாக்குதல்களை ஊக்குவிக்கும் நாடுகள், அதற்கான விலையைக் கொடுத்து வருகின்றன. பயங்கரவாதத்தைப் பொருத்தவரை நல்லது, கெட்டது எனப் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் அந்தக் கூற்றை பாகிஸ்தானும், அதன் தோழமை நாடுகளும் புரிந்துகொள்ள மறுக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பும் குறிப்பிட்ட சில பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பதை நிறுத்திவிட்டால், தெற்காசிய நாடுகளின் பாதுகாப்புச் சூழல் மேம்படும். பிற நாடுகளுக்கு எதிராக மறைமுகப் போர் தொடுப்பதற்கு பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளால் இந்திய மண்ணில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற மறைமுகத் தாக்குதல் பல்வேறு நாடுகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பயங்கரவாதத்தில் நவீனத் தொழில்நுட்பம்: தற்போதைய கணினிமயமான உலகில், நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவது அதிகரித்து வருகின்றன.

பயங்கரவாதச் சிந்தனை கொண்ட தனிமனிதன் கூட, எவ்வாறு தாக்குதல் நடத்தலாம் என்பதை வீட்டிலிருந்து வெளியே செல்லாமல், இணையதளத்தின் வாயிலாக கற்றுக்கொள்ள முடிகிறது.

பல பயங்கரவாத அமைப்புகள், தங்களது நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் இணையதளம் மூலம் பரப்புகின்றன. இத்தகைய பிரசாரங்கள் இளைஞர்கள், வன்முறைப் பாதையில் செல்வதற்கு வழிவகுக்கும். மேலும், நவீனத் தொழில்நுட்பங்களின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பயங்கரவாதப் பிரசாரங்கள், அப்பாவி இளைஞர்களின் மனத்தில் நச்சு விதைகளை விதைக்கக்கூடும்.

இணையதளத்தை ஊடகமாகப் பயன்படுத்தி குற்றச்செயல்கள் புரியும் பயங்கரவாதிகளைக் கண்காணிக்க தொழில்நுட்ப வல்லமை கொண்ட பிரத்யேக நிபுணர் குழு அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்பு: பயங்கரவாதிகள் நாடு கடந்து சென்று தாக்குதல் நடத்துபவர்கள். எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பது அவசியம்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளும், பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து வருவது குறித்து அக்கறை கொள்ள வேண்டும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தியா அறக்கட்டளை – சர்தார் படேல் காவல் பாதுகாப்பு பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவால், இலங்கை ராணுவத் தலைவர் சரத் பொன்சேகா, அமெரிக்க கடலோரக் காவல்படையின் முன்னாள் அதிகாரி ஜேம்ஸ் லாய், மத்திய உள்துறை முன்னாள் செயலர் ஜி.கே.பிள்ளை ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்திய முஸ்லிம்கள் தேசபக்தி மிக்கவர்கள்

 இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்தரங்கில் அவர் மேலும் கூறியதாவது:

“வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் நாடாக விளங்குவதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. உலகிலேயே இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக, அதிக அளவில் முஸ்லிம்கள் வசிப்பது நம் நாட்டில்தான். இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள். அடிப்படைவாதக் கொள்கைகள் அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது.

மேலும், பயங்கரவாதம் என்பது இந்திய முஸ்லிம்களுக்கு அன்னியமான ஒரு விஷயம். எனவேதான் இந்திய முஸ்லிம்களை ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈர்க்க முடியவில்லை.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சொற்ப எண்ணிக்கையிலேயே இந்திய இளைஞர்கள் இணைந்ததாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் சில இளைஞர்கள் அந்த அமைப்பிலிருந்து திரும்பி வந்துவிட்டனர் என்றார் அவர்.

-http://www.dinamani.com

TAGS: