அடங்காத கேரளம்…முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை கட்ட ஆய்வாம்!!

mullaiperiyarதிருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரளா ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பழுதடைந்து உள்ளதாகவும், இதன் காரணமாக அணை உடைந்தால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி அழியும் அபாயம் உள்ளது என்றும் கேரள மாநில அரசு கூறி வருகிறது.

இதனால் முல்லைப்பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்கக்கூடாது என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், 142 அடி உயரம் வரை அதில் தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அணை உறுதியாக இருப்பதால், அந்த பகுதியில் புதிய அணை கட்ட தேவையில்லை என்றும் கூறியது.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிய அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்பு துறையிடம் கேரளா அரசு அனுமதி கோரியது. இதையடுத்து அந்த பகுதியில் அணை கட்டுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை உத்தரவிட்டது.

அதன்பேரில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்காக முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 13 இடங்களில் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. இந்த இடங்களில் ஆழ்துளைகள் அமைக்கப்பட்டு மண் பரிசோதனை செய்யப்படும். அத்துடன் புதிய அணை உருவாகும் நிலையில் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும். கேரளா நீர்ப்பாசனத்துறை நிர்வாக பொறியாளர் ஜார்ஜ் மேற்பார்வையில் இந்த ஆய்வுப்பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை வலிமையுடனும், பாதுகாப்பாகவும் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ஆனால் அந்த பகுதியில் புதிய அணை கட்டுவதற்கோ, அது தொடர்பான ஆய்வுகளை நடத்தவோ தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்கிறது கேரளா.

http://tamil.oneindia.com

TAGS: