ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் எந்தப் பயனும் இல்லை… மீத்தேன் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்! – செந்தமிழன் சீமான்
மீத்தேன் பிரச்னை குறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மீத்தேன் எரிகாற்று எடுக்கப்போகும் பிரச்னை ஒட்டுமொத்த விவசாயிகளையும் போராட்ட களத்தில் நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மீத்தேன் பிரச்னை குறித்துப் பேசிய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் மீத்தேன் எடுக்க உரிமம் எடுத்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் மீத்தேன் எடுப்பதற்கான குறைந்தபட்ச பணியைக்கூட அங்கு தொடரவில்லை என்றும், மத்திய அரசு கேட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் சொல்லி அதனாலேயே அந்த நிறுவனம் மீத்தேன் எடுப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய இருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் காரணங்களைச் சொல்லியிருக்கிறார்.
இதிலிருந்தே மீத்தேன் பிரச்னையில் பாரதீய ஜனதா அரசு இன்னமும் தீவிரத்தோடுதான் இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இலட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டங்களையோ கட்சி பாகுபாடற்ற கொந்தளிப்புகளையோ கொஞ்சமும் மனதில் கொள்ளாமல் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தின் நடவடிக்கைகளை மட்டுமே மனதில் கொண்டு மீத்தேன் எடுக்கும் உரிமத்தை ரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர். 766 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விவசாய மண்ணைக் காவு வாங்கக் காத்திருக்கும் மீத்தேன் எரிகாற்று திட்டத்தையே ரத்து செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீத்தேன் எரிகாற்று எடுக்கும் தனியார் நிறுவனத்தின் உரிமத்தை மட்டுமே ரத்து செய்யவிருக்கும் நிலையில், அந்த திட்டமே ரத்தானதைப் போல் போலி பிம்பத்தை தமிழகத்தில் சிலர் உருவாக்கி வருகிறார்கள். மீத்தேன் அரக்கனை வேரறுக்க நெஞ்சுறுதியோடு நிற்கிற விவசாயப் பெருமக்களின் உணர்வுகளைச் சிதைப்பதற்கான முயற்சியாகவே இதனைச் சிலர் பரப்புகிறார்கள். மீத்தேன் எரிகாற்று எடுக்கும் திட்டத்தின் நிலை குறித்த தெளிவான நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மீத்தேன் திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படாது என வெளிப்படையாக அறிவித்து, தமிழக மக்களின் கொந்தளிப்பை தணித்து முழு நிம்மதியை மத்திய அரசு உண்டாக்க வேண்டும்.
கிரேட் ஈஸ் டர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு மாற்றாக வேறு நிறுவனத்தைக் கொண்டுவந்து, அதற்கு உரிமம் வழங்கி மீத்தேன் எடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக வரும் பேரச்சமான செய்திகளை அவ்வளவு சீக்கிரத்தில் புறந்தள்ளிவிட முடியாது. கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் மீத்தேன் எடுக்க போடப்பட்ட திட்டம் இன்றைய பாஜக ஆட்சி வரை புரியாத மர்மங்களையே மக்களிடத்தில் விதைத்து வருகிறது.
எனவே மீத்தேன் பிரச்னையில் தமிழக மக்களின் அச்சத்தைத் தீர்க்கும் விதமாக மீத்தேன் திட்டம் ரத்தாகும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். இதைச் செய்யாமல் மீண்டும் மீண்டும் மக்களைக் குழப்பும் விதமாகவே பாரதீய ஜனதா அரசு செயல்பட்டால், மீத்தேன் எரிகாற்றுக்கு எதிரான போராட்டங்கள் இன்னும் பெரிதாகத் தீவிரமெடுக்கும். மீத்தேன் எரிகாற்று பிரச்னையில் தமிழக மக்களின் பக்கம் நிற்கும் தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்ததைப் போலவே விவசாயத்தைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்கிற நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக நிற்க வேண்டும்.
-http://www.sankathi24.com