டெல்லியில் இன்று நடைபெற்ற மாநில சிறுபான்மையினர் ஆணையங்கள் கூட்டு மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உருக்கமாக பேசியுள்ளார்.
டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறுபான்மையின பிரிவுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத் சிங், தாய் மதத்துக்கு திரும்புதல் என்ற பெயரில் நடக்கும், ‘கர் வாப்ஸி’ தொடர்பாக சில வேளைகளில் வதந்திகளும், சர்ச்சைகளும் எழுகின்றன.
என்னை பொருத்தவரை மதமாற்றம் என்பதே தேவை தானா? என்று எண்ணத்தோன்றுகின்றது.
மதம் மாறாமலே நம்மால் மக்களுக்கு சேவை செய்ய இயலாதா? ஒருவரின் மதத்தை மதிக்காமல் நம்மால் வாழமுடியாதா?
மதமாற்ற முயற்சியில் ஈடுபடாமல் ஒரு மதத்தால் நிலைத்திருக்க முடியாதா? முடியும் என்றால், மதமாற்றத்துக்கான அவசியம் தான் என்ன?
இந்தியாவை போன்ற ஒரு நாடு தனது அடையாளத்தையும் தனித்தன்மையையும் மாற்றப்படுவதை எப்படி அனுமதிக்கும்? இந்தியா தனது தனித்தன்மையிலேயே இருக்கட்டும்.
நாம் ஏன் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொள்ள வேண்டும். இது துரதிர்ஷ்டவசமானது.
கடவுள் ஒன்றுதான் என்பதை நான் நம்புகிறேன். அவரை பல பெயர்களால் மக்கள் அழைக்கிறார்கள்.
நமது மதத்தை நாம் போதனை செய்யும்போது, மற்றவர்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ முடியாதா?
மேலும், மதமாற்றம் என்பது யாருடைய குறிக்கோளாகவும் இருக்க முடியாது என்றும் நாம் அனைவரும் அவரவருக்குரிய மதங்களை போதித்துக்கொண்டு சமாதானமாக வாழ முற்படுவோம் எனவும் பேசியுள்ளார்.
-http://www.newindianews.com