எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு பாக்கு நீரிணையில் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதில்லை என்று தமிழக மீனவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் நேற்று சென்னையில் இடம்பெற்ற சந்திப்பு சுமுகமாக முடிந்திருக்கிறது.
இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் காரணமாக இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் பிரச்சினை தொடர்ந்து வருகிறது.
இதனை தீர்க்கும் முகமாக தமிழக அரசாங்கம் 52 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.
இதனைத் தவிர இந்திய மத்திய அரசாங்கம் 975 கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று சந்திப்பில் பங்கேற்ற தமிழக மீனவர் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் இந்திய தரப்பில் இருந்து வரும் இழுவைப்படகுகள் இலங்கை கடல்பகுதிக்கு வராமல் ஆழ்கடல் பகுதிகளுக்கு திருப்பிவிடப்படவுள்ளன.
இதேவேளை குறித்த மூன்று வருட காலப்பகுதியில் 83 நாட்கள் தாம் பாக்குநீரிணையில் தொழில் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய மீனவ தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து சந்திப்பு நிறைவடைந்த நிலையில் இலங்கை தரப்பினர் நேற்று சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவை தமது நாட்டின் மீனவ சங்கங்களின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் எதிர்வரும் மேமாத இறுதியில் இலங்கை தரப்பின் பதில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-http://www.tamilwin.com