சமுதாயத்தில் எந்தவித பலனும் எதிர்பார்க்காமல் ஒரு லட்சியத்திற்காகவோ அல்லது ஒரு கொள்கைக்காகவோ நம்முடைய உழைப்பினை வழங்குவது சமூக சேவை ஆகும்.
மக்களின் தேவைகளுக்காக பாடுபட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சமூகத்தில் இயங்கி வருகின்றன.
ஒரு குழுவாக இருந்து செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு மத்தியில் தனி ஆளாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் டிராபிக் ராமசாமி.
யார் இவர்?
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் பிறந்த கே.ராமசாமி(82), புகழ்பெற்ற இந்திய பொதுநலச்சேவகர் ஆவார்.
பொதுச்சேவையில் ஈடுபடுவதற்கு முன்பு, அவர் நெசவு ஆலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பொதுச்சேவையை தொடங்கியபோது சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம் ஆகும்.
அரசியல், சமூக சேவை அமைப்பு என எவற்றையும் சார்ந்திருக்காமல் தனி ஆளாக இருந்து தமிழகத்தை கலக்கி வரும் இந்த வயதான நபரை பற்றி தான் சமீபத்தில் சமூகவலைதளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இவரைப்பற்றிய செய்திகள் வெளிவருவது இது ஒன்றும் முதன்முறை கிடையாது.
ஏனெனில், 2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் சென்ற மீன் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர்.
சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய முதலாளிகளுக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்து பல கட்டிடங்களை இடித்ததுடன், விதிமுறை மீறி கட்டப்பட்டுருந்த கட்டிடங்கள் செயல்படாமல் இருக்க பெரிதும் காரணமாக இருந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், சாலையோரம் வைக்கப்படும் பேனர்கள் மற்றும் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் என்ற பெயரில் சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் மக்களுக்கு இடையூறாக இருந்தால் அவற்றை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.
இவ்வாறு பல்வேறு நன்மைகளை செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்த இவர், சமீபத்தில் கைது செய்யப்பட்டதால் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிவிட்டார்.
பல்வேறு வழக்குகளை தனி ஆளாக நின்று எதிர்கொண்டு வந்த இவர், கடந்த புதன்கிழமை(11ம் திகதி) புரசைவாக்கம் சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக இருந் சுவரொட்டிகளின் அவலம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அந்த வழியாக காரில் சென்ற வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவர், சாலையில் நின்று பேட்டி தராதீர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது ஓரமாக நின்று பேட்டி கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் வரை சென்றுள்ளது.
இதனையடுத்து வீரமணி வேப்பேரி காவல் நிலையம் சென்று தன்னை டிராபிக் ராமசாமி தாக்க முற்பட்டார் என்றும், தனது காரின் கண்ணாடியை உடைத்து விட்டார் எனவும் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட பொலிசார் எந்தவித தாமதமும் காட்டாமல் மின்னல் வேகத்தில் சென்று, ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாகப் பேசுதல், வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் என 4 சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட ராமசாமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், உடல்நிலை மோசமாகி மயங்கி விழுந்த அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓமந்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த அவருக்கு, வாரம் ஒருமுறை நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் எலும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
தனி ஒரு மனிதர், அதுவும் வயதானவர் என்று கூட பாராமல் காவல்துறை தனது அதிகாரத்தை காட்டியுள்ளது என பலர் கண்டனங்கள் தெரிவித்தனர்.
சமுதாயத்தில் பல்வேறு பிரச்சனைகள் தலைவிரித்தாடும் போது அதையெல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, கண்டுகொண்டாலும் தாமதமாக நடவடிக்கை எடுக்கும் போது ராமசாமி விடயத்தில் மட்டும் அவசரம் காட்டியது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சாலையில் பேனர்கள், போஸ்டர்கள், தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் என்ற பெயரில் கட்சிகள் செய்யும் அட்டூழியங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பல இன்னல்களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
ஆனால், இந்த சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை சமுதாயத்தில் ஒரு அங்கமாகிய நாம் கண்டும் காணாமல் செல்லும்போது, பொதுநல சேவகரான ராமசாமி ஆர்வத்துடன் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருவது மக்களுக்கு பெரும் உதவியாகவும், ஆதரவாகவும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
-http://www.newindianews.com
நல்லது செய்தால் எந்த அரசியல்வாதிக்கும் பிடிக்காது! கடைசியில் உங்களுக்கும் ஆப்பு! நாங்கள் தமிழர்கள், இப்படித்தான்!
ஏழரை கோடி மக்கள் தொகையில், உன் ஒருவனுக்கு, 82 வயதில் இது தேவையா ?