தமிழக வனத்துறைக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் வனப்பகுதியில் மனித – விலங்கு மோதல்களால் அரியவகை விலங்கினங்களின் உயிரிழப்பு சட்டவிரோத மின்சார வேலிகளாலும், வாகனங்களாலும், தற்காப்பு கருதி சுட்டுக்கொல்லப்படுவதாலும் தொடர்ந்து நடைபெற்றுவந்த வண்ணம் உள்ளன.
சுட்டுக்கொல்வதை தவிர்த்திருக்க முடியும்:-
கோத்தகிரி வனப்பகுதியில் கடந்த வாரம் தம்பதியர் இருவரைக் கொன்று பெண் கரடியுடனும்,குட்டியுடனும் சுற்றித்திரிந்த ஆண்கரடியை பிடிக்கும் முயற்சியில் மயக்க ஊசி செலுத்தியபோது மருந்தின் திறன் பற்றாக்குறையினால் கரடி திருப்பி வனத்துறையினரை தாக்கியதில் தங்களை தற்காத்துக்கொள்ள வேறுவழியின்றி கரடி சுட்டுக்கொல்லப்பட்டது. அதேபோல கடந்த மாதம் 14-ம் தேதி பந்தலூர் அருகே புலியும் சுட்டுக்கொல்லப்பட்டது.
வனத்துறையினருக்கு போதிய பயற்சி இல்லை:-
வெளிநாடுகளில் இதுபோன்ற விலங்குகளை பிடிக்க பயிற்சிபெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.அதனால் விலங்குகள் கொல்லப்படமால் காப்பாற்றப்படுகின்றன.போதிய முன் அனுபவம்,பயிற்சி இல்லாத காரணத்தால் வனத்துறையினரால் கரடி சுட்டுக்கொல்லப்பட்டது.
வனத்தை பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டனர். வனவிலங்குகளுக்கு விவசாய பூமி,வனம் என்று பிரித்தறிய தெரியாது.
எனவே உணவு தேடி வருவதும்,தங்குவதும் வனவிலங்குகளின் இயற்கையே.ஆகவே மயக்கத்துறையில் பயிற்சி பெற்ற மருத்துவக்குழுவுடன் தனிக்குழு அமைத்து விலங்குகளைப் பிடித்து மீண்டு அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல தற்போது கோத்தகிரியில் குட்டியுடன் சுற்றித்திரியும் பெண் கரடியை பாதுகாப்பாகப் பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும்.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கும்,வனத்துறையின் உயர் அதிகாரிக்கும் கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
-http://www.nakkheeran.in