மேக்கேதாட்டு அணை திட்டம்: பிரதமரிடம் கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு முறையிடும்: சித்தராமையா

மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து முறையிடுவதற்காக அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசுகையில் அவர் கூறியது: கோலார், சிக்பளாப்பூர், தும்கூரு, பெங்களூரு ஊரக மாவட்டங்களில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தப் பிரச்னையைப் போக்குவதற்காகவே ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் உள்ள மேக்கேதாட்டு பகுதியில் காவிரி நதிக்கு குறுக்கே அணை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக விரிவானத் திட்ட அறிக்கை (டிபிஆர்)தயாரிப்பதற்காக பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது சரியல்ல. இந்த விவகாரத்தை தமிழகம் அரசியலாக்கப் பார்க்கிறது. நல்ல மழை பெய்யும் காலத்தில் உபரியாகக் கிடைக்கும் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. கடலில் கலக்கும் தண்ணீரைத் தேக்கி வைத்து குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதால் தமிழகத்தின் நலன் பாதிக்கப்படாது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 192 டிஎம்சி தண்ணீர் போக மீதமுள்ள உபரிநீரைப் பயன்படுத்தவே கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டத்துக்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது.

மேலும், மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டம் கர்நாடக எல்லைக்குள் நிறைவேற்றப்படவுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை தமிழகம் நிறைவேற்றிய போது கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதேபோல, மேக்கேதாட்டு திட்டத்துக்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை. அந்த உரிமையைப் பாதுகாக்க சட்ட, அரசியல்ரீதியான போராட்டங்களில் ஈடுபடத் தயாராக இருக்கிறோம்.

காவிரி விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக அல்லாமல், எதிர்க் கட்சிகளின் கருத்தறிந்து ஒருமனதாக முடிவு எடுக்க வகை செய்யப்படும்.

பிரதமரைச் சந்திப்போம்: மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளன. அதேபோல, கர்நாடக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கர்நாடகத்தின் நிலைப்பாட்டை விளக்குவோம். மத்திய அமைச்சர்களையும் சந்தித்து உண்மைநிலையை எடுத்துரைப்போம் என்றார்.

அணை கட்ட பாஜக முழு ஆதரவு: அப்போது குறுக்கிட்ட கர்நாடக எதிர்க்கட்சி (பாஜக) தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்துக்கு எவ்வளவு நிதி வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம். இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பாஜக உறுதுணையாக இருக்கும்.

மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை அரசியலாக்க தமிழகம் முயற்சிக்கிறது என்றார்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மாநில அரசின் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

-http://www.dinamani.com

TAGS: