மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு அலட்சியம் காட்டி வருவதால், தெலுங்கானா மாநிலத்திற்கு விற்பனை செய்ய முடிவு

minsaramகாற்றாலை மின்சாரத்தை வாங்க, தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், மின் வாரியம் மூலமாகவே, தெலுங்கானா மாநிலத்திற்கு விற்பனை செய்ய, காற்றாலை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், நெல்லை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, 10 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், ஜூன் முதல், அக்., மாதம் வரை, காற்றாலை சீசன் துவங்கும். அப்போது, காற்று பலமாக வீசும் என்பதால், காற்றாலை மின் நிலையங்களில் இருந்து, நாள்தோறும், 3,000 – 4,000 மெகாவாட், மின்சாரம் கிடைக்கும். காற்றாலை உற்பத்தியாளர்கள், தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, ஒரு யூனிட் மின்சாரம், சராசரியாக, 3.10 ரூபாய் என்ற குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். ஆனால், சீசனின் போது, காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைத்தும் மின் வாரிய அதிகாரிகள் அதை வாங்காமல், பி.பி.என்., சமல்பட்டி, மதுரை பவர், ஜி.எம்.ஆர்., நிறுவனங்களிடம், ஒரு யூனிட், 12 ரூபாய் என்ற அதிக விலைக்கு வாங்கி வந்தனர். ஐந்து மாதங்கள் மட்டும் வரக் கூடிய, காற்றாலை மின்சாரத்தை மின் வாரிய அதிகாரிகள் முழுவதுமாக வாங்காததால், உற்பத்தியாளர்களுக்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், வரும், ஜூன் முதல், காற்றாலை சீசன் துவங்க உள்ளது. இதனால், ‘காற்றாலைகளில் உற்பத்தியாகும், மின்சாரம் முழுவதையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சமீபத்தில், சென்னை வந்த, மத்திய மின் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம், காற்றாலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், ‘சதர்ன் ரீஜன் பவர் கமிட்டி’ நிறுவன அதிகாரிகள், ‘தமிழகத்தில் உபரியாக உள்ள, காற்றாலை மின்சாரத்தை, மின் வாரியம், எங்களிடம் அளித்தால், பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து தரப்படும்’ என, மின் வாரிய அதிகாரிகளிடம், தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, முடிவு எடுக்க, சென்னை, மின் வாரிய அலுவலகத்தில், அதன் தலைவர் சாய்குமார்,

காற்றாலை உற்பத்தியாளர்களுடன், நேற்று மதியம்,3:00 மணிக்கு, ஆலோசனை நடத்தினார். இதில், ஜூன் முதல், அக்., மாதம் வரை, காற்றாலைகளில் இருந்து, மின் வாரியம், மின்சாரம் வாங்கிய பின், உபரியாக உள்ள மின்சாரத்தை, பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யுமாறு, உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு சிலர் தமிழகம் வாங்க மறுப்பதால், முழுவதையும் கொடுத்து விடலாம் என்றும் யோசனை தெரிவித்தனர்.

இதுகுறித்து, காற்றாலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு, ‘காற்றாலை மின்சாரம் முழுவதுமாக வாங்க வேண்டும்’ என, மின் வாரிய அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டும், அதிகாரிகள் வாங்கவில்லை. தற்போதும், அதே நிலை தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்திற்குள் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பிற மாநிலங்களுக்கு விற்க அரசு விதித்த தடை, தற்போதும் அமலில் உள்ளது. எனவே, அதில், சீசன் நேரத்தில் காற்றாலை மின்சாரத்திற்கு விலக்கு அளித்து, மின் வாரியம் வாங்கியது போக, எஞ்சியுள்ள உபரி மின்சாரத்தை, தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களுக்கு, மின் வாரியம், மத்திய மின் துறை நிறுவனம் மூலம், விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம், காற்றாலை மின்சாரம் முழுவதுமாக பயன்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஜி.எம்.ஆர்., வழி துண்டிக்க தயக்கம் :

சென்னை,பேசின் பிரிட்ஜில், ஜி.எம்.ஆர்., மின் நிலையம் உள்ளது. இந்நிறுவனத்திடம், மின்சாரம் வாங்க, மின் வாரியம் செய்த ஒப்பந்தம், கடந்த பிப்., மாதத்துடன் முடிவடைந்தது. ஜி.எம்.ஆர்., மின் நிலையத்தில் இருந்து, பேசின் பிரிட்ஜ், 230/110 – மூன்று; செம்பியம், 110; சிந்தாதிரிப்பேட்டை, 110 கிலோவோல்ட் துணைமின் நிலையம் என, ஐந்து வழித்தடங்களில், மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.தற்போது, ஜி.எம்.ஆர்., மின்சாரம் வாங்காத நிலையிலும், மேற்கண்ட வழித்தடம் வழியாக, மின்சாரம் கொண்டு செல்வதை துண்டிக்க, அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.இதனால், அந்த நிறுவனத்திடம், மின் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை அரசு, நீட்டிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.”

யார் கட்டுப்பாட்டில்?

மின் வாரிய தலைவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாய்குமார் உள்ளார். ஆனால், மின் கொள்முதல், மின் திட்டம், நிலக்கரி பிரிவுகளில் உள்ள, ஓய்வுபெற்ற அதிகாரிகள் தான், மின் வாரியத்தின், முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர். அவர்கள், மின் வாரியத்தில் எடுக்கப்படும் தகவலை, தலைமைச் செயலக உயர் அதிகாரி, உயர் மட்டத்தினருக்கு, முன்கூட்டியே தெரிவிக்கின்றனர். அவர்கள் தரும் ஆலோசனையின் படி, கோப்புகள் தயாரித்து, வாரிய தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புகின்றனர். அதன்படி முடிவு எடுத்தால், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, வாரிய ஊழியர்கள் கூறுகின்றனர்.வாரிய தலைவர், அலுவலகம் வருவது முதல், வீடு திரும்பும் வரை, அவரின் அனைத்து நடவடிக்கையையும் தெரிந்து கொள்ள, உயர் மட்டத்தினர், தங்களுக்கு வேண்டிய மூன்று ஊழியர்களை, மின் வாரிய அலுவலகத்தில், ஒற்றர்களாக நியமித்துள்ளனர். இதனால், மின் வாரியம், அதன் தலைவர் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் கூறப்படுகிறது.

-http://www.dinamalar.com

TAGS: