புகையிலை பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் என்று எவ்வித இந்திய ஆய்வுகளிலும் நிரூபிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற குழு அறிக்கை தாக்கல் செய்திருப்பது சர்ச்சை எழுந்துள்ளது.
புகையிலை பொருட்களில் அபாய எச்சரிக்கையை 40 சதவிகிதத்தில் இருந்து 85 சதவிகிதமாக அதிகரிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திலீப்காந்தி தலைமையில் நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு அறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தக் குழு தங்களது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், புகையிலை பொருட்களின் பயன்பாடு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று இந்தியாவில் நடத்தப்பட்ட எந்தவித ஆய்வுகளிலும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இதுவரை புகையிலைக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரத்யேக ஆய்வு நடத்தினால் முடிவுகள் வேறாக இருக்கக் கூடும் என்று அந்தக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே, நாடாளுமன்ற குழுவின் அறிக்கை மிகவும் வருத்தம் அளிக்கிறது. புகையிலையை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்று நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவருக்குமே தெரியும். மத்திய குழு இதனை ஏன் மறுக்கிறது என்பது தெரியவில்லை. இதற்கு ஆதாரங்கள் வேண்டும் என அவர்கள் விரும்பினால் அதனை தர நாங்களும் தயார் என்றார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளில் உடல் நலம் பாதிப்பு தொடர்பான விளம்பரம் இடம் பெற வேண்டும். மேலும் சிறிய எழுத்துக்களில் இருப்பது போதாது என்றும், இது இந்த விளம்பரத்தில் 85 சதவீதம் இடம் பெற வேண்டும் என்றும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு ஏப்ரல் 1ம் தேதியுடன் காலவதியாகிறது. ஆனால் சிகரெட் மற்றும் புகையிலை நிறுவனங்கள் இதற்கு உடன்பட்டதாக தெரியவில்லை. மத்திய அரசும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. மத்திய அரசு இன்னும் கால அவகாசம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.
-http://www.nakkheeran.in