தாலி அகற்றும் விழாவை தடுத்து நிறுத்த கொ.ம.க, பா.ஜ.க, கட்சியினர் புகார் மனு

 

kolathur-mani-300கோவையை அடுத்துள்ள சூலூர் கலங்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் சுயமரியாதை கலைப்பண்பாட்டு கழகம் சார்பில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாட்டுக்கறி உணவு மற்றும் தாலி அகற்றும் விழா நடைபெறுவுள்ளது.

திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணியின் கருத்துரையுடன் நடக்கும் இந்த விழாவை சூலூரில் உள்ள பல்வேறு அமைப்புகள் சார்பில் தாலியை அகற்றும் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டி ருந்தது.

இந்த நிலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி, பாரதீய ஜனதா கட்சி மாநில செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார், இந்து மக்கள் கட்சி(தமிழகம்) தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சுமார் 50 பேர் நேற்றுக்காலை கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி கிறிஸ்துராஜுவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இந்த நிகழ்ச்சியை பற்றி அறிந்து பசுவையும், தாலியையும் தெய்வமாக மதிக்கக்கூடிய பெண்களும், பொதுமக்களும் கொதித்துப் போய் இருக்கிறார்கள். இந்திய நாட்டின் கலாசார பண்பாட்டு சின்னமாக விளங்கக்கூடிய தாலிக்கும், பசுவிற்கும் கேவலத்தையும், அவமானத்தையும் உருவாக்கக்கூடிய இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தாலியை உயிருக்கு மேலாக மதிக்கக்கூடிய அனைத்து தரப்பு சமுதாய மக்களும், திருநங்கைகளும் சமுதாய கட்டுப்பாட்டோடும், கண்ணியத்தோடும், நல்லெண்ண ஒழுக்கத்தின் அடையாளமாகவும், சட்டத்திற்கு உட்பட்டு அமைதியாக வாழும் இந்த சூழ்நிலையில் சிலரால் நடத்தப்படும் இந்த விழா ஒவ்வொருவரின் மனதிலும் வேதனையை ஏற்படுத்தி ஆறாத வடுவாக அமைந்துவிடும். எனவே அந்த விழாவை நடைபெறாமல் தடுத்து நிறுத்தி சமூக ஒற்றுமைக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை கிழக்கு மாவட்ட தலைமை நிலைய செயலாளர் சோ.பா.மோகன்குமார்,மாநகர் மாவட்ட செயலாளர் எம்.செந்தில்மயில்சாமி, மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குழந்தைவேலு மற்றும் பலர் உடன் இருந்தனர். இந்த மனுவின் நகலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரிடமும் அளித்துள்ளனர்.

-http://www.nakkheeran.in

TAGS: