ஏழைகளுக்கு கடன் வழங்குவதில் பரிவு காட்டுங்கள்: மோடி அறிவுரை

  • மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 80-வது ஆண்டு விழாவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.

    மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 80-வது ஆண்டு விழாவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.

ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் கடன் வழங்குவதில் பரிவுடன் செயல்படுமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கும் பொறுப்பு பொதுத் துறை வங்கிகளுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மும்பையில் ரிசர்வ் வங்கியின் 80-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மோடி பேசியதாவது:

பொருளாதார ரீதியிலான பல கடுமையான சவால்களை எதிர்கொண்டு, 80 ஆண்டுகளை ரிசர்வ் வங்கி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும்.

நாட்டின் பல்வேறு கட்ட வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இனிதான் அந்த வங்கிக்கு நிறைய பொறுப்புகள் காத்திருக்கின்றன.

ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயராமல், நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியப்படாது. எனவே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், பழங்குடியினர், விவசாயிகள் ஆகியோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்த வேண்டும்.

கடன் சுமைகளால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு மிகுந்த வேதனைக்குரியது. அவற்றை வெறுமனே செய்திகளாக மட்டும் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது பொதுத் துறை வங்கிகளின் கடமை இல்லையா?

விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி, மனிதாபிமான அடிப்படையில் கடன்களை வழங்க பொதுத் துறை வங்கிகள் முன்வர வேண்டும். அவற்றை திரும்ப வசூலிக்கும்போதும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

விரிவான நிதிக் கொள்கைகள்: எதிர்வரும் 2035-ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவை ரிசர்வ் வங்கி கொண்டாடவுள்ளது. இந்த இடைப்பட்ட இருபது ஆண்டுகளுக்கான விரிவான நிதிக் கொள்கைகளை ரிசர்வ் வங்கி வகுக்க வேண்டும். அவை, அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும்படியாக இருக்க வேண்டும்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா 2019-ஆம் ஆண்டிலும், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் 2022-ஆம் ஆண்டிலும், ரிசர்வ் வங்கியின் 90-ஆவது ஆண்டு விழா 2025-ஆம் ஆண்டிலும், நூற்றாண்டு விழா 2035-ஆம் ஆண்டிலும் கொண்டாடப்படவுள்ளது.

மேற்குறிப்பிட்ட நிதிக் கொள்கைகளை வகுப்பதற்கு இந்த நான்கு ஆண்டுகளையும் அடையாள இலக்குகளாகக் கொண்டு ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும்.

சமையல் எரிவாயு மானியம்: சமையல் எரிவாயு மானியத்தின் முழுப் பலன்களும் ஏழைகளைச் சென்றடைய வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது. எனவே, அந்த மானியத்தை விட்டுக்கொடுக்க செல்வந்தர்கள் முன்வர வேண்டும்.

சமையல் எரிவாயு மானியத்தை ஒரு கோடிப் பேர் விட்டுக் கொடுத்தால், அதே அளவு ஏழை மக்கள் பயனடைவார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

தங்களிடம் பணிபுரியும் வசதி படைத்த ஊழியர்களிடம் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்கும் படி வங்கிகளும், தொழில் நிறுவனங்களும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

இன்றைய தினம் வரை, விறகு அடுப்புகளின் சுட்டெரிக்கும் வெப்பத்தில் நின்று சமையல் செய்யும் ஏழைக் குடும்பங்களுக்கு நீங்கள் விட்டுக் கொடுக்கும் மானியப் பலன்கள் சென்றடையும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

சமையல் எரிவாயுவுக்கான நேரடி மானியத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது முதலாக, தங்களுக்கான மானியங்களை பலர் விட்டுக் கொடுத்துள்ளனர். அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

மானியங்கள் குறைப்பு: நாட்டின் வளர்ச்சித் திட்டங்ளைக் கருத்தில் கொண்டு மானியக் குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, முந்தைய நிதியாண்டில் ரூ.60,000 கோடியாக இருந்த பெட்ரோலியப் பொருள்கள் மீதான மானியம், நிகழ் நிதியாண்டில் ரூ.30,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ரகுராம் ராஜனுக்கு பாராட்டு: நாட்டின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் நீடிக்கச் செய்ய பல சிறந்த திட்டங்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வகுத்துள்ளார். அவரது செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளன. பொருளாதார நிலவரம் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் பல கருத்தொற்றுமைகள் உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம் என்றார் நரேந்திர மோடி.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் ரிசர்வ் வங்கியின் கடந்த 80 ஆண்டுகால பங்கு அளப்பரியது. பொருளாதாரச் சீர்திருத்ததத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியப் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றார் அருண் ஜேட்லி.

“இந்திய காகிதங்களில் பணம் அச்சடிக்க வேண்டும்’

இந்திய காகிதங்கள், மை ஆகியவற்றைக் கொண்டு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இன்றைய நாளில் நாம் ஓர் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அந்த நாளில், நாம் அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் காகிதங்களும், மையும் இந்தியத் தயாரிப்புகளாக இருக்க வேண்டும்.

சுதேசி இயக்கத்துக்காகப் போராடிய காந்தியின் புகைப்படம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காகிதங்களில் அச்சடிக்கப்படுவது முரண்பாடான விஷயமாகும்.

“இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தை, ரூபாய்நோட்டுகளில் இருந்து தொடங்க வேண்டும் என்றார் மோடி.

இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் எஸ்.எஸ்.முந்த்ரா பேசுகையில், “இன்னும் சில மாதங்களில், ரூபாய் நோட்டுகளை இந்தியத் தயாரிப்பில் வெளியிடுவோம் எனபதில் ரிசர்வ் வங்கி உறுதியாக உள்ளது’ என்றார்.

-http://www.dinamani.com

TAGS: