எங்களை தாக்கவந்த போர்விமானத்தை இந்திய வீரர்கள் விரட்டினர்; ஏமனில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேட்டி

yemenஅரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டுப்போர் வலுத்து வருகிறது. அங்கு வேலை நிமித்தமாக சென்றுள்ள சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் போர்ப்பிரதேசங்களில் சிக்கி தவித்தனர். இதையடுத்து அவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு ‘ஆபரேஷன் ரஹத்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

அவர்களை மீட்பதற்காக முதல் கட்டமாக ‘ஐ.என்.எஸ்.சுமித்ரா’ என்ற போர்க்கப்பல், ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பல் மூலம் 40 தமிழர்கள் உள்பட 358 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

அவர்கள் புதன்கிழமை அண்டை நாடான ஜிபோட்டிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 168 பேர் அங்கிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘சி–17 குளோப் மாஸ்டர்’ போர் விமானம் மூலமாக கொச்சி அழைத்து வரப்பட்டனர்.

ஏமனில் உள்ள ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த சென்னையை சேர்ந்த மகேஷ் என்பவர் கூறுகையில், ‘‘நாங்கள் அனைவரும் இந்திய கப்பலில் ஏறி அமர்ந்து புறப்பட தயாராக இருந்தோம். அப்போது திடீரென போர் விமானம் ஒன்று எங்கள் கப்பலை வட்டமிட்டதால் கலக்கம் அடைந்தோம். இதனால் தாக்கப்பட்டு விடுவோம் என்று பயந்து விட்டோம். இருப்பினும் இந்திய கடற்படை வீரர்கள் அந்த விமானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதையடுத்து எங்களை வட்டமிட்டு கொண்டு இருந்த போர் விமானம் அங்கு இருந்து சென்று விட்டது. அதன் பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டோம்’’ என்றார்.

மும்பை வந்தடைந்தவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு ரெயில்கள் மூலம் கட்டணமின்றி செல்வதற்கு இந்திய ரெயில்வே ஏற்பாடு செய்து கொடுத்தது. கேரளா செல்லும் மங்களா எக்ஸ்பிரஸ், சென்னை வரும் சென்னை மெயில், கொல்கத்தா செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரெயில்கள் மூலம் பயணம் ஆயினர்.

முன்னதாக மும்பையில் அவர்களுக்கு மாநில அரசு சார்பில் கைச்செலவுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. உணவுப்பொட்டலங்களும் வினியோகிக்கப்பட்டன.

-http://www.nakkheeran.in

TAGS: