கிரானைட் குவாரிகளில் நடுங்க வைக்கும் நரபலிகள்… சுழலும் சகாயத்தின் சாட்டை!!

sagayam-111-600மதுரை: கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைப் பற்றி விசாரணை மேற்கெண்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தனது பத்தாவது கட்ட விசாரணையில் தனக்கு வந்த நரபலி புகார்களை விசாரிக்க நேரடியாக களமிறங்கியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் ஒடிசா, பீகார், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்த தலித் சமூகத்தினரை மூட நம்பிக்கையின் அடிப்படையில் நரபலி கொடுக்கப்பட்டதாக அதிகாரி சகாயத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் புகார் வந்தது. மனநோயளிகளும் பல இடங்களில் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது பத்தாவது கட்ட விசாரணையில் இந்த புகார்களின் மீது நேரடியாக விசாரிக்க களமிறங்கிய சகாயத்திற்கு மதுரை மட்டுமல்லாது விருதுநகர் மாவட்ட குவாரிகளிலும் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த அந்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளாராம் சகாயம்.

நரபலி புகார் விசாரணை மேலூர் புதுத்தாமரைப்பட்டி ரவி என்பவரின் 3 வயது மகள் கோபிகா நரபலி கொடுக்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் ரவியின் மனைவி உஷாவிடம், சகாயம் விசாரணை நடத்தினார். அதேபோன்று மற்றொரு டிரைவர் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து அவரது மனைவியிடமும் சகாயம் விசாரணை நடத்தி முடித்துள்ளார் சகாயம்.

விருதுநகரிலும் நரபலிகள் மதுரையைத் தாண்டியும் பக்கத்து மாவட்டமான விருதுநகரிலும் கிரானைட் குவாரிகளில் பல்வேறு நரபலிகள் அரங்கேறிய சம்பவங்கள் குறித்து அதிர்ச்சியளிக்கும் புகார்கள் சகாயத்திற்கு வந்துள்ளது. கடந்த 2012 ஜனவரி மாதம்11ஆம் தேதி பருத்திக்காட்டில் வேலை செய்துவிட்டு தனியாக வந்த பெண்ணை காரில் கடத்தி, மந்திரவாதி ஒருவர் மூலம் ஒரு கிரானைட் குவாரி அருகே வைத்து நரபலி கொடுத்துவிட்டு பிணத்தை அவர் வேலை பார்த்த பருத்திக்காட்டில் போட்டுவிட்டு சென்றுவிட்டனராம்.

சமரச பேச்சுவார்த்தை அந்தப் பெண்ணின் உறவினர் புகார் கொடுக்கவே, போலீஸ் வந்து விசாரணை நடத்தியது. மோப்பநாய் ராணி பருத்திக்காட்டில் இருந்து மோப்பம் பிடித்துக்கொண்டு நரபலி கொடுத்த கிரானைட் இடத்தில் போய் படுத்தது. பிறகு அங்கிருந்து ஓடி கிரானைட் கம்பெனியில் வேலை பார்க்கும் லாரி டிரைவர், மேனேஜர் போன்றவர்களை நாய் கவ்விப்பிடிக்கப் போனதாம். உடனே சுதாரித்த போலீசார், நாயைப் பிடித்து நிறுத்தியதோடு கிரானைட் உரிமையாளருக்கு போன் செய்து பேசி முடித்துக்கொண்டனராம்.

புதைக்கப்பட்ட நரபலிகள் நான்கு நபர்கள் சேர்ந்து கொலை செய்ததாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதுமட்டுமல்லாது எட்டுக்கும் மேற்பட்ட நபர்களை நரபலி கொடுத்ததாகப் புகார் வந்துள்ளதாம். முகவரி, இடம் என்று அனைத்தும் துல்லியமாகக் குறிப்பிட்டு வந்துள்ள அந்தப் புகாருடன் ஒரு வரைபடமும் வரைந்து அதில் நரபலி கொடுக்கும் இடத்தைத் துல்லியமாகக் குறிப்பிட்டு அனுப்பி இருக்கிறார்களாம். இந்தப் விருதுநகர் மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையாம். அது மட்டுமல்லாது புகார் அனுப்பிய நபர்களும் மிரட்டப்பட்டு தாக்குதலுக்குள்ளாக்கி வருகின்றனராம்.

அறிக்கை அளிக்க உத்தரவு விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் உள்ள சில குவாரிகளில் விதிமீறல், முறைகேடுகள் நடந்துள்ளன. பணம் மற்றும் அரசியல் பலம் காரணமாக இந்த குவாரிகளில் நடந்த முறைகேடுகள் வெளியாகவில்லை. கனிமவள விதிமீறல்களும் நடந்துள்ளதாக விருதுநகர் மாவட்டம் மீசலூரை சேர்ந்த விடியல் வீரப்பெருமாள், என்பவர் சகாயத்திற்கு புகார் மனு அனுப்பினார் இந்த முறைகேடுகள் தொடர்பாக, 10 நாட்களில் அறிக்கை தருமாறு, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு சகாயம் உத்தரவிட்டுள்ளார்.

 

ஜாங்கிட் நகர் மக்கள் திருமோகூர் ஜாங்கிட் நகரில் வீட்டு மனைகளை பி.ஆர்.பி. நிறுவனம் ஆக்கிரமித்த புகார்கள் குறித்து பிளாட்டுகளை பறிகொடுத்த ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சகாயத்திடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். மதுரை கோட்டாட்சியர் செந்தில்குமாரி, பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர் ரங்கசாமி உள்ளிட்ட சில துறைகளின் அதிகாரிகள், விசாரணை குழு கேட்ட விவரங்களை தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து சகாயம் நேற்று தனது பத்தாவது கட்ட விசாரணையை முடித்துக் கொண்டுள்ளார். நரபலி புகார்கள் குறித்து சகாயத்தின் சாட்டை சுழற்றத் தொடங்கியுள்ளதால் கிரானைட் குவாரி உரிமையாளர்களும் நரபலிக்கு உடந்தையாக இருந்தவர்களும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனராம்.

கொலை முயற்சி அதேநேரத்தில் கடந்த வாரம் சகாயம் குழுவினரை கொல்ல முயற்சி செய்த சம்பவம் சம்பந்தமாக இதுவரை யாரையும் மதுரை மாவட்ட காவல் துறை கைது செய்யவில்லையாம். ஒத்தக்கடை காவல் நிலையமோ, அரிவாளுடன் வந்த மர்மநபரை அழைத்து முறைப்படி விசாரணை எதுவும் நடத்தவில்லையாம். அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் விஷயத்திலேயே அரசு இத்தனை அலட்சியம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

TAGS: