உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: தமிழக முதல்வர் வலியுறுத்தல்

  • மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஓ,பன்னீர் செல்வம்.

    மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஓ,பன்னீர் செல்வம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

தில்லி விஞ்ஞான் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:

சமூகத்தில் உள்ள அனைவருக்கும் விரைவாக நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதற்கான நடவடிக்கையாக நீதித் துறையில் மாநில அளவிலான திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

2015-16 மாநில நிதி பட்ஜெட்டில் நீதித் துறைக்கு ரூ.809.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2010-11, 2011-12 நிதியாண்டுகளின் போது நீதித் துறைக்கான நிதியை தமிழக அரசுக்கு, மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நிதியாண்டுகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், 2012-13-இல் ரூ.19.53 கோடி, 2013-14-இல் ரூ.73.43 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதேபோல, அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கும் மத்திய அரசு நிதியை ஒதுக்க வேண்டும். இதன்மூலம் 2017-ஆம் ஆண்டுக்குள் நீதிமன்றங்களுக்கு சொந்தக் கட்டடம் அமையும் வாய்ப்பு ஏற்படும்.

மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு புதிய நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளின் தேவை அதிகரித்துள்ளன. நீதிமன்ற சேவையை மேம்படுத்தும் வகையில் விசாரணை கைதிகளிடம் விசாரணை நடத்த ஏதுவாக அனைத்துச் சிறைச்சாலைகள், கிரிமினல் நீதிமன்றங்களில் கானொளிக் காட்சி (விடியோ கான்ஃபிரான்சிங்) வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது 169 சிறைச்சாலைகள், 352 நீதிமன்றங்களில் இச்சேவையைப் பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்ற வழக்குகளை பெண் டி.எஸ்.பி. மேற்பார்வையில் பெண் போலீஸாரே விசாரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 42 மகிளா விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று தமிழக அரசு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. ஏற்கெனவே, தமிழக அரசின் ஆட்சி மொழியாக உள்ள தமிழ் மொழி, அலுவல் மொழியாகவும் இருந்து வருகிறது. எனவே, நீதித் துறை நிர்வாகத்தையும் மக்கள் எளிதில் அணுகும் வகையில், நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.

இக்கூட்டத்தில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் டாக்டர் எம்.ராஜாராம், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-http://www.dinamani.com

TAGS: