உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் இருந்து தனது நாட்டின் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில், உலக நாடுகளை இந்திய கடற்படை வியக்கவைத்துள்ளது.
கடைசியாக நாடு திரும்பிய 670 இந்தியர்களையும் சேர்த்து, ஏமனில் இருந்து இதுவரை 2300 பேரை மீட்டுள்ளது இந்திய கடற்படை.
இந்திய கடற்படையின் நடவடிக்கையைக் கண்டு வியந்துள்ள 23 நாடுகள், தங்கள் நாட்டு குடிமக்களை ஏமனில் இருந்து மீட்கும்படி இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
ஏமன் நாட்டில் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினருக்கும் அதிபர் மன்சூர் ஹதி படையினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப் படைகள், கிளர்ச்சிப் படைகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதனால் ஏமனில் பணியாற்றி வரும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் போர்முனையில் சிக்கித் தவித்து வந்து வந்தனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய கடற்படையின் போர்க் கப்பல், விமானம் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
ஏமனின் பல்வேறு நகரங்களில் சிக்கித் தவித்த இந்தியர்கள் போர்க் கப்பல்கள் மூலம் ஜிபோத்தி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இரு தினங்களில் மூன்று விமானங்களில் மொத்தம் 670 இந்தியர்கள் நாடு திரும்பினர். அவர்களையும் சேர்த்து இதுவரை 2300 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தகவலில், ‘பெரும்பான்மையான இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ளவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஏமனில் இருந்து தங்கள் நாட்டினரை மீட்குமாறு, இந்தியாவிடம் 23 நாடுகள் உதவி கோரியுள்ள தகவலையும் அவரே வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, ஏமன் மீட்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய கடற்படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
ராணுவ அதிகாரிகள், வெளியுறவுத் துறை, கடற்படை, விமானப் படை உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியை வெகுவாக பாரட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர் அல்லாத வெளிநாட்டினரும் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டது நெகிழ்ச்சியூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அனைவரும் மீட்கப்பட்டுவிடுவர்:
மிகுந்த இக்கட்டான சூழல்களையும் பொருட்படுத்தாமல் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளது கடற்படையின் மகத்தான பணி என்று தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ஏமனில் இருந்து இந்தியர் அனைவருமே திங்கள்கிழமை இரவுக்குள் மீட்கப்பட்டுவிடுவர் என்று தெரிவித்தார்.
யெமனில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களில் 58 பேர் அழைத்து வரப்படுகின்றனர்!
யெமனில் சுமார் 100 பேர் வரை தொழில் புரிகின்றனர். அவர்களில் 58 பேர் யெமனிலிருந்து சீன விமானம் மூலம் பஹரேய்னுக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து மிஹின் லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உள்நாட்டு யுத்தம் காரணமாக யெமனில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் 58 பேரை�யும் மிஹின் லங்கா விமானம் மூலம் இலங்கை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
யெமனில் சுமார் 100 பேர் வரை தொழில் புரிகின்றனர். அவர்களில் 58 பேர் யெமனிலிருந்து சீன விமானம் மூலம் பஹரேய்னுக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து மிஹின் லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
யெமனின் தலைநகர் ‘சனா’ என்ற பிரதேசத்தில் தங்கியிருந்த 58 பேரே முதற்தடவையாக அழைத்து வரப்படுகின்றனர்.
யெமனின் ஏனைய பகுதிகளிலுள்ள இலங்கையர்களையும் தலைநகர் சனா பிரதேசத்திற்கு அழைத்து வந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யெமனிலுள்ள சுமார் 20 பேர் தங்களுக்கு நாடு திரும்ப அவசியமில்லையென்றும் அவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஐந்து இலங்கையர்கள் தென்னாபிரிக்காவின் ஜுபுட் அரசு பகுதியில் வதிகின்றனர். அவர்களையும் இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிலர் வேலைவாய்ப்பு பணியகத்தில் தம்மை பதிவு செய்து கொள்ளாததாலும் வேறு சிலர் பிற நாடுகளிலிருந்து யெமனிற்குள் சென்றிருப்பதாலும் இலங்கையர் தொடர்பிலான முழுமையான விவரங்களை பெறமுடியாதுள்ளது.
இவர்கள் தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக வெளிவிவகார அமைச்சும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இணைந்து வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
யேமனில் சிக்கியோரை மீட்க இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவுடன் போட்டியிடும் சீனா
போர்ப்பதற்றம் சூழ்ந்துள்ள வளைகுடா நாடான யேமனில் இருந்து, இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு, இந்தியாவிடம் சிறிலங்கா உதவி கோரியிருந்த நிலையில், சீனா தானாக முன்வந்து உதவி வருகிறது.
யேமனில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான சவூதி அரேபிய கூட்டணிப் படைகளின் விமானத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணிகள் முனைப்படைந்துள்ளன.
இந்தியா தனது போர்க்கப்பல்களை யேமனுக்கு அனுப்பி, அங்கிருந்து தனது குடிமக்களை மீட்டு, அருகில் உள்ள நாடான டிஜிபோட்டிக்கு அனுப்பி வருகிறது.
அங்கிருந்து, அவர்கள் விமானம் மூலம் இந்தியாவுக்கு வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தப் பணிகள் இந்திய வெளிவிவகார இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் நேரில் சென்று ஒருங்கிணைந்திருந்தார்.
இந்தநிலையில், யேமனில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான இலங்கையர்களை மீட்க உதவும் படி, இந்தியாவிடம் சிறிலங்கா கோரியிருந்தது.
அதற்கு இந்தியா இணங்கியிருந்த போதிலும், தனது நாட்டுக் குடிமக்கள் அதிகம் இருப்பதலால் அவர்களை திருப்பி அழைப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.
இந்தநிலையில், சிறிலங்காவுக்கு வலிந்து உதவ முன்வந்த சீனா, முதற்கட்டமாக, 39 இலங்கையர்களை விமானம் மூலமாக மீட்டு, பஹ்ரெயினுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளது.
அங்கிருந்து அவர்களை கொழும்புக்கு அனுப்பி வைக்க உதவுவதாக, பஹ்ரெய்ன் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அதேவேளை, மேலும் 8 இலங்கையர்கள் டிஜிபோட்டி துறைமகத்தை கடல்வழியாக அடைந்துள்ளனர்.
அதேவேளை, மேலும் 59 இலங்கையர்களை சீன விமானம் மூலம் மீட்க நேற்று மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இவர்களை வான்வழியாக மீட்பதற்கு, சவுதி அரேபியா, யேமன் ஆகிய நாடுகளின் அனுமதி தேவைப்படுகிறது.
ஆனால் இந்த நாடுகள் அதற்கு அனுமதி வழங்காததால், நேற்று சீனாவின் மீட்பு முயற்சி கைகூடவில்லை.
இதற்கிடையே, 20 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 439 பேரை இந்தியப் போர்க்கப்பல் ஒன்று நேற்று யேமனில் இருந்து டிஜிபோட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இவர்களில் ஒரு இலங்கையர் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையர்களை மீட்க உதவும் விவகாரத்தில், இந்தியாவுடன் சீனா போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-http://www.tamilwin.com