20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

செம்மரக் கடத்தல்காரர்கள் 20 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி, ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து, தானே முன்வந்து, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரும், நீதிபதியுமான டி. முருகேசன் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர், “தற்காப்புக்காக’ எனத் தெரிவித்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 20 பேரைக் கொன்றதை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது; 20 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதானது, தீவிரமான மனித உரிமை மீறலாகும் என்றார்.

போலீஸார், வனத் துறை அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி, ஆந்திர தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அவர் உத்தரவிட்டார் என அந்த அறிவிப்பில் தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

-http://www.dinamani.com

TAGS: