ஆந்திர அதிரடிப்படை போலீசார் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில் 20 தமிழர்கள் பலி!( படங்கள் )

andhra-shootoutஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த சேஷாசலம் காட்டில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த கடத்தல் புள்ளிகள் தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி, மரங்களை வெட்டி, வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். இதில், ஆந்திர கடத்தல் பேர்வழிகள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற பின், செம்மரம் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். ‘செம்மரம் கடத்த காட்டிற்குள் செல்பவர்கள், சுட்டுக் கொல்லப்படுவர்; ஒரு முறை பிடிபட்டாலும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்’ என, ஆந்திர போலீஸ் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது.

இதை கடிதம் மூலமாக, தமிழக — ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேலுார், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு தெரிவித்தனர். கடத்தலை தடுக்க, சிறப்பு டி.ஐ.ஜி., காந்தா ராவ் தலைமையில், ஆந்திர வனத்துறை, போலீசார் இணைந்த, கூட்டு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. டி.எஸ்.பி., பாலகிருஷ்ணா தலைமையில், இப்படையினர் நேற்று, திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், சந்திரகிரி மண்டலம் சீனிவாச மங்காபுரத்தில் இருந்து, திருமலை கோவிலுக்கு செல்லும் நடைபாதை ஒட்டி, ஸ்ரீவாரி மெட்டு என்ற இடம் உள்ளது. அங்கிருந்து, 8 கி.மீ., துாரத்தில் உள்ள, ஈத்தகுண்டா, சிகட்டி கோனா ஆகிய இடங்களுக்கு, நேற்று அதிகாலை மரம் வெட்ட, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த, கடத்தல் தடுப்பு அதிரடிப் படையினர், மரம் வெட்ட சென்ற கூலித் தொழிலாளர்களை சுற்றி வளைத்தனர். ஆனால், அவர்கள் பிடிபடாமல் தப்பிக்க, கல், கம்பு, கட்டைகளால் போலீசாரை தாக்கியதாக, ஆந்திர போலீசார் கூறுகின்றனர்.

கூலித் தொழிலாளர்கள் தாக்கியதில், 11 போலீசார் காயமடைந்ததை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஈத்தகுண்டாவில், 9 பேரும், சிகட்டி கோனாவில், 11 பேர் என, மொத்தம், 20 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர். பலர் காட்டிற்குள் தப்பியோடினர். இதில், 2 பேர் சர்வதேச செம்மர கடத்தல் புள்ளிகள் என்பதும், மரம் வெட்ட வந்தவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பதும் தெரிய வந்தது.

துப்பாக்கிச் சூட்டில் பலியான, 20 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த, மரம் வெட்டு தொழிலாளர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்த, ஒன்பது பேர், வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அடுத்துள்ள புதுார் நாடு, வேப்பங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர், சேலம், விழுப்புரத்தை சேர்ந்த எட்டு பேர் என, அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

-http://www.nakkheeran.in

TAGS: