20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம்… திட்டமிட்ட என்கவுண்டரா? – திடுக் சந்தேகங்கள்

andhra-encounter34சென்னை : திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிடப்பட்ட என்கவுண்டராக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்கள் செம்மரங்களை வெட்டுவதாக தகவல் கிடைத்து, நேற்று அதிகாலை அம்மாநில போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது 20 தமிழக தொழிலாளர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். செம்மரங்களை கடத்த முயன்றவர்கள் தங்கள் மீது கற்களை வீசித் தாக்கியதாகவும், தற்காப்புக்காகவே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆந்திர போலீஸ் விளக்கமளித்துள்ளது.

ஆனால், சம்பவம் நடந்த இடம் மற்றும் பலியானவர்களின் உடல்களைப் பார்க்கும் போது, இச்சம்பவம் திட்டமிடப்பட்ட என்கவுண்டராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

20 தமிழர்களும் கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. இந்த சந்தேகம் எழுவதற்கான காரணங்களாவன:-

ஸ்ரீவாரிமெட்டு சேஷாசலம் வனப்பகுதியில் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த 9 உடல்கள், ஒரு இடத்திலும், அங்கிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் மற்ற 11 உடல்களும் கிடந்தன உயிரிழந்த 20 பேரின் உடல்களும் ஒரேவிதமாக மல்லாந்த நிலையில் இருந்தது ஏன்? அவர்கள் துடிதுடித்து இறந்ததற்கான அடையாளம் ஏதுமில்லை.

மேலும், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களும் எதுவும் இல்லை. சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களின் உடல் அருகே தலா ஒரு செம்மர கட்டைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் அந்த மரக்கட்டைகள் நேற்று வெட்டிய புதிய கட்டைகள் அல்ல. அவை 20 நாட்களுக்கு முன் வெட்டி, அடையாளக் குறியிட்டு, குடோனில் போட்டு எடுத்து வரப்பட்டவை எனக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்ததாக கூறப்படுகிற இடத்தில், வெட்டி கடத்துகிற வகையில், பெரிய செம்மரங்கள் இல்லை. குறிப்பாக 5 கி.மீ. தூரம் வரை செம்மரங்களே இல்லை என்று தெரிய வந்துள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களின் உடல் பகுதியில் அவர்கள் தனிப்படையினரால் பிடித்து அடித்து சித்ரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளாக அவர்களது தோள், மார்பு பகுதிகளில் காயங்கள் காணப்படுவது அம்பலமாகி உள்ளது. பலியானவர்கள் அனைவரும் மேல் சட்டை இன்றி வெறும் டவுசர் போன்ற உடையுடன் மட்டுமே கிடக்கின்றனர்.

மேலும், அவர்களது அருகில் செருப்புகள் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. ஓடிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தால், அவர்களது செருப்பு வெவ்வேறு திசைகளில் சிதறிக் கிடக்க வேண்டும்.

இதேபோல், பலியானவர்கள் அனைவருக்கும் வயிறு மற்றும் நெற்றியில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அவர்கள் கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் நிறுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப் பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

செம்மரக் கடத்தல்காரர்களை தேடி தனிப்படையினர் நடத்திய வேட்டையின்போது, ஏராளமானவர்கள் சிக்கியதாகவும், அவர்களில் தமிழர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு, நள்ளிரவில் சுடப்பட்டு, உடல்கள் வனப்பகுதியில் கொண்டு போய் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடல் கிடந்த இடங்கள் ஒற்றையடி பாதையாக இருக்கின்றன. 200 பேர் கூட்டமாக போகக்கூடிய சூழல் இல்லை. 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், மற்ற 180 பேர் எங்கே போனார்கள்?

இதுவரை நடக்காத கொடுமை; முகத்தில் சுடப்பட்ட 7 பேர்!

திருப்பதி மலையில் நேற்று ஆந்திர போலீசார் 20 தமிழர்களை சுட்டுக்கொன்றனர்.  இதுவரை இந்த அளவுக்கு ஒரே இடத்தில் 20 பேர் கொல்லப்பட்டது இல்லை.  அதுவும் ஆயுதம் எதுவும் இல்லாதவர்கள் சுடப்பட்டுள்ளனர்.   எனவேதான் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தற்காப்பு என்ற பெயரில் 20 பேரை சுட்டுக்கொன்றதை நியாயப்படுத்தவே முடியாது என்று மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.

சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரில் 11 பேர் ஓரிடத்திலும் 9 பேர் வேறொரு இடத்திலும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.  9 பேர் பிணமாக கிடந்த இடத்தில் 7 பேர் முகத்திலும் , பின்புறத்தில் கழுத்திலும் சுடப்பட்டுள்ளனர்.   பலரது உடல் எரிந்த நிலையில் காணப்பட்டது. வயிறு, தோள்பட்டை, கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.  தோல் உரிந்திருந்தது.  இறந்தவர்கள் பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்.

20 தமிழரை திட்டமிட்டு படுகொலை செய்து எரித்த ஆந்திராவின் காட்டுமிராண்டிதனம்-தேவை சி.பி.ஐ. விசாரணை!

சென்னை: செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்ததாக ஆந்திரா போலீசார் கூறுவது அப்பட்டமான பொய் என்பது நாடே அறிந்துவிட்டது..

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மைகள் வெளியே வரும்.. உண்மை குற்றவாளிகள் கூண்டிலே நிறுத்தப்படுவார்கள்.. ”

ஆந்திரா மாநிலத்தின் திருப்பதி வனப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர்; அவர்களை சரணடைய சொன்னோம்.. சிலர் எங்கள் மீதே தாக்குதல் நடத்தினார்கள்..அதனால் சுட்டுப் படுகொலை செய்தோம்” இதுதான் ஆந்திரா போலீசார் சொல்லி வரும் திரைக்கதை..

இந்த திரைக்கதையை ‘அரசுகள்’ வேண்டுமானால் ஏற்கலாம்.. ஆனால் மனசாட்சி உள்ள எந்த ஒரு மனிதனும் ஏற்கவே முடியாது என்பதற்கு வெளியாகி இருக்கும் புகைப்படங்களும் ஆந்திரா போலீசார் அளித்த பேட்டிகளுமே சாட்சி….

20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்த இந்த படுகொலைக்கு தலைமையேற்ற போலீஸ் அதிகாரி காந்தராவ், சுட்டுக் கொல்லப்பட்டோரில் 12 பேர் தமிழர்கள்; 9 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; 3 பேர் வேலூரைச் சேர்ந்தவர்கள்; 2 பேர் சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள்.. எஞ்சியோரை அடையாளம் காணுகிறோம்” என்று புள்ளி விவரமாகக் கூறியிருந்தார்.

அதிகாலையில் வனப்பகுதிக்குள் நடந்த தேடுதல் நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்டோர் மரம் வெட்டிக் கொண்டிருந்த நிலையில் “தற்காப்புக்காக” சுடும் போது இறந்தவர்களின் ஊர், பெயர், முகவரி, குலம், கோத்திரம் எல்லாம் ஆந்திரா அதிகாரிகளுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது எப்படி?

வனப்பகுதிக்குள் மரம் வெட்டிய 200 பேரும் தமிழர்கள் என்பதை எப்படி போலீஸ் அதிகாரி காந்தராவ் கண்டுபிடித்தார்? சுட்டுக் கொல்லப்பட்டோரில் 2 பேர் சர்வதேச கடத்தல் கும்பல் என்றெல்லாம் சொல்லத் தெரிந்த அதிகாரிக்கு அவர்கள் எந்த தேசம்? அவர்களது பூர்வோத்திரம் என்ன என்பதை மட்டும் சொல்லாமல் மறைத்தது எப்படி?

200 பேர் மரம் வெட்டினார்கள்… சுட்டோம்.. 20 பேர் பலியானார்கள் எனில் ஒருவர் கூட காயம்படவில்லையா? காயம்பட்ட நிலையில் ஒருவர் கூட பிடிபடவில்லையா? அப்படியானால் எத்தனை போலீசார் தேடுதல் நடவடிக்கைக்குப் போனார்கள்?

தமிழர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த, உயிருக்குப் போராடிய ஒரு போலீசாரைக் கூட நீங்கள் இதுவரை வெளி உலகுக்கு காட்டவில்லையே ஏன்?

இந்த சந்தேகங்கள் ஒருபுறம்… சுட்டுக் கொல்லப்பட்ட சடலங்களை மனசாட்சி உள்ள மனிதர்கள் பார்த்தாலே தெரிகிறது.. அனைவரும் நிச்சயமாக கைது செய்யப்பட்டு பல நாள் விசாரணைக்குப் பின்னர் எங்கோ சுடப்பட்டு இந்த வனாந்திரத்தில் போடப்பட்டிருப்பது உறுதியாக தெரிகிறது…

அதிகாலையில் வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் பலியானதாக சொல்லப்படுவோர் அருகில் இருக்கும் மரங்கள் எதுவுமே பச்சை மரமாக இல்லையே… பலியான ஒவ்வொரு சடலமுமே சொல்லி வைத்தாற்போல ஒவ்வொரு செம்மரத்தை தாங்கியபடி இருக்கிறதே?

பலியான அனைவரது உடல்களுமே அரை நிர்வாணமாக இருக்கிறதே பலியான பலரது உடல்கள் தீக்காயங்களுடன் எரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது எப்படி? சுட்டுப் படுகொலை செய்த உடன் தடயங்களே இருக்கக் கூடாது என சடலங்களை ஆந்திரா போலீஸ் எரித்ததா? துப்பாக்கியால் சுடுவதற்கு பதிலாக இலங்கை ராணுவத்தைப் போல தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி படுகொலை செய்தததா?

சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் 12 பேர் தமிழர்கள் என்று காலையில் கூறிய ஆந்திரா போலீஸ் திடீரென மாலையில் 20 பேரும் தமிழர்களே என்று புள்ளி விவரத்துடன் கூறுகிறது.. காலையில் 12 தமிழர்கள்.. மாலையில் 20 பேரும் தமிழர்கள் என்பதை யாரை வைத்து விசாரித்தது ஆந்திரா போலீஸ்? படுகொலையான 20 பேரின் முழு விவரமும் ஆந்திரா போலீஸுக்கு முன்பே தெரிந்து இருந்ததால்தானே இது சாத்தியமானது?

சுட்டுப் படுகொலை செய்ப்பட்டோரில் ஒருவர் கூட ஆந்திரா மாநிலத்தவரே இல்லையே அது எப்படி? திருப்பதி சேசாலம் வனப்பகுதி தமிழகத்தின் ஒருங்கிணைந்த பகுதியா? ஆந்திராவா? அங்கே ஆந்திரர்கள் ஒருவர் கூட கடத்தல்காரர்களே இல்லையா?

தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டும் இந்த கேள்விகளை எழுப்பவில்லை.. இதோ ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சிந்தா மோகன் சொல்கிறார்..

தமிழர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.. இதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருக்கிறது என்கிறார்.. இதற்கு ஆந்திரா போலீஸ், ‘அரசியல் உள்குத்து’ என்று பதில் சொல்லப் போகிறதா?

ஏன் இந்த கொலைவெறியாட்டம் போட்டது ஆந்திர போலீஸ்? தமிழர்கள் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவே மட்டுமா? இத்தனை மர்மங்களுக்கும் விடை தெரிய வேண்டுமெனில் நிச்சயம் தேவை சி.பி.ஐ. விசாரணை மட்டுமே!

20 தமிழரின் உயிரின் அவ்வளவு கிள்ளுக்கீரையாகிப் போய்விட்டதா ஆந்திரா போலீசுக்கு? 20 தமிழரின் குடும்பங்களின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிய உங்கள் காட்டுமிராண்டித்தனங்களுக்கு நிச்சயம் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்..

தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.. இதற்கு தேவை சி.பி.ஐ. விசாரணை மட்டுமே! படுகொலையான தமிழருக்கு நீதி கிடைக்க தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும்! இந்தக் குரல் மனசாட்சி உள்ள மனிதர்களின் குரலாக உரத்து ஒலிக்க வேண்டும்!!

tamil.oneindia.com

TAGS: