பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் (80) சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 8) காலமானார்.
ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய நண்பர்களால் ஜே.கே என்று அழைக்கப்பட்டவர். அவர் சிறிது காலமாக உடல்நலக் குறைவுடன் இருந்தார். அவருக்கு 2 மனைவிகள், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
பன்முகத் திறமை கொண்டவர்: தமிழ் இலக்கிய உலகில் புரட்சிகர சிந்தனைகளுக்கு வித்திட்ட ஜெயகாந்தன், கடலூரில் 1934-ஆம் ஆண்டு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், விமர்சகர் என பன்முகத் திறமை கொண்டவர்.
கடந்த 2002-ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக மத்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர்.
மேலும், 2009-ஆம் ஆண்டு மத்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதை தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறையாகப் பெற்றார். இது தவிர, 1972-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதும், 2011-ஆம் ஆண்டு ரஷிய விருதும் பெற்றார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்…ஜெயகாந்தனுக்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தது. எனவே, அவர் ஐந்தாம் வகுப்பு வரையே பள்ளிக்குச் சென்றார். தனது 12-ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, விழுப்புரத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு, அவரது மாமா கம்யூனிஸ கொள்கைகளையும், சுப்பிரமணிய பாரதி படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இலக்கியம் மீது ஆர்வம்: சிறிது காலம் கழித்து, ஜெயகாந்தனை அவருடைய தாய் சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அந்த உறவினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்.
இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது இளமைக்காலத்தை கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு பரிச்சயமானார். அந்தக் கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடல்களைக் கேட்க கேட்க, இலக்கியத்தின் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இதனால், கட்சியின் அப்போதைய உறுப்பினர் ஜீவானந்தம், அவருக்குத் தமிழாசிரியர் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.
தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலை பார்த்தார். 1949-இல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், தஞ்சாவூரில் காலணி விற்கும் கடையில் தாற்காலிகமாகப் பணியில் சேர்ந்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
காலப்போக்கில் கம்யூனிஸ கொள்கைகளிலிருந்து மாறுபட்ட ஜெயகாந்தன், காமராஜரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இதனால் அவரது தொண்டனாக மாறி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை: ஜெயகாந்தன் தனது இலக்கிய வாழ்க்கையை 1950-களில் தொடங்கினார். “சரஸ்வதி’, “தாமரை’, “கிராம ஊழியன்’, “ஆனந்த விகடன்’ “அமுதசுரபி’, “தினமணி கதிர்’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின. அவரது படைப்புகள் அனைத்தும் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவர் தலை சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார்.
எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்த அவர், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். அவரது படைப்புகளான “உன்னைப் போல் ஒருவன்’, “சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற நாவல்கள் படமாக்கப்பட்டன. “உன்னைப் போல் ஒருவன்’ படத்துக்கு, சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.
படைப்புகள்: ஜெயகாந்தன், பல்வேறு வாழ்க்கை வரலாறு, நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். “வாழ்விக்க வந்த காந்தி 1973′, “ஒரு கதாசிரியனின் கதை’, “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, “ரிஷிமூலம்’, “கருணையினால் அல்ல’, “கங்கை எங்கே போகிறாள்’ ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
தனது சிறந்த படைப்புகளால் காலத்தை வென்ற ஜெயகாந்தனின் இறுதிச் சடங்குகள் சென்னை வடபழனி ஏவிஎம் மயானத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
எழுத்தாளர்களின் பார்வையில்…
மறைந்த ஜெயகாந்தன் குறித்து எழுத்தாளர்கள் அசோகமித்திரன், வண்ணநிலவன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏற்கெனவே தெரிவித்த புகழாரங்கள்:-
“ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து நீடிக்காமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்”
– அசோகமித்திரன்
“மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ஜெயகாந்தன் என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர் தத்ரூபம் என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருக்கின்றன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான விஷயம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப் புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். “
– வண்ணநிலவன்
“பாரதியார் வாழ்ந்த காலங்களில் கெüரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் நோபல் பரிசு பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கெüரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்படுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கெüரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்.”
– எஸ். ராமகிருஷ்ணன்
-http://www.dinamani.com































எழுத்தாளர் ஜெயகாந்தனின் முஸ்லிம் பெயர் என்ன?
ஓர் எழுத்தாளன் இருக்கும்போது அவனைப் பற்றி நினைக்கவும் ஆள் இருக்காது. இறந்துவிட்டால் ஆளாளுக்கு முந்திக் கொண்டு தமிழுக்குத் தொண்டு செய்வோன் என்றும், தமிழ்த்தாயின் மடியில் வீற்றிருப்பார் என்றும் புகழ்பாடுவார்கள். எழுத்தாளர் சங்கங்களும், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அநைத்து ஊடகங்களும் எல்லாமே இதில் அடக்கம்…
தமிழ் கூர் நல் உலகின் கலை மற்றும் இலக்கிய சகாப்தங்கள் சரிந்தன, E M ஹனிபா,ஜெயகாந்தன்.
நல்ல வேலை சீக்கிரம் போனார் இந்த ஆளு ! அம்மா என்ற வார்த்தையை ரோமன் எழுத்தில் amma என்று எழுத சொன்ன ஆசாமி ! அது என்னவோ தமிழில் உயர் நிலை அடைந்து விட்டால் , ஒன்று பக்தி வரும் , இல்லை புத்தி போய்விடும் ! ஐயா நாகூர் அஹிபாவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் , இறைவனிடம் கையை ஏந்துங்கள் என்ற பாடலை என் சிறு வயதில் பாடி மகிழ்ந்ததுண்டு !
எழுத்து உலகில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியவர். அவருடைய இலக்கிய படைப்புக்கள் எல்லாக் காலத்திலும் நிலைத்து நிற்கும். அவர் சமயத்தைத் தானே தேர்ந்து எடுத்துக் கொண்டார். நல்லது கெட்டது தெரிந்தவர். குறை சொல்ல ஒன்றும் இல்லை.அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.