இந்தியாவில் அதிரடி பொருளாதார மாற்றங்கள் சாத்தியமில்லை

இந்தியாவில் இப்போதைய நிலையில் அதிரடியாக பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவருவது சாத்தியமில்லை என மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறினார்.

இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை 2014-15 தொடர்பாக சென்னை பொருளாதார கல்வி மையத்தில் அவர் புதன்கிழமை நிகழ்த்திய உரை:

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மக்கள் மாற்றத்தை விரும்பி புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இரண்டாவதாக, உலகம் முழுவதும் நிலவும் சூழல் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆதரவாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் பணவீக்கம் குறைந்துள்ளது. அதோடு, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. பிரேசில், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ளன.

இதனால், முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற நாடாக இந்தியா இப்போது மாறியுள்ளது. எனவே, சில ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

ஏழை, எளியவர்களைப் பாதுகாப்பது, இளைஞர்கள், மத்திய தர வர்க்கத்தினருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது ஆகிய இரண்டு நோக்கங்களை நமது பொருளாதாரம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்கான கொள்கைகளை உருவாக்குவதற்கு உதவி செய்யவே பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது.

பட்ஜெட்டுக்கு முன்னதாக நமது பொருளாதாரத்தில் அதிரடியான மாற்றங்கள் கொண்டுவரப்படும் என பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்தியாவில் அதிரடியான, மிகப்பெரிய பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வருவது சாத்தியமில்லை.

மிகப்பெரிய நெருக்கடிகள் ஏற்படும்போதுதான் அதிரடியான பொருளாதார மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்தியாவில் 1991-இல் தாராளமயக் கொள்கையும் அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில்தான் கொண்டுவரப்பட்டது.

8 முதல் 8.5 சதவீத வளர்ச்சி: கச்சா எண்ணெய் விலை குறைவு போன்ற காரணங்களால் நிகழாண்டில் பணவீக்க விகிதம் 5 முதல் 5.5 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும். அதேபோல, பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நல்ல பருவமழை, பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட காரணங்களால் அடுத்த நிதியாண்டில் (2016-17) பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புள்ளி விவரங்களை மட்டும் வைத்து பொருளாதாரம் வலுவாக இருப்பதாக எண்ணக் கூடாது. பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னும் நாம் முழுமையாக விடுபடவில்லை. இப்போதுதான் விடுபட்டு வந்துகொண்டிருக்கிறோம்.

நிதிப் பற்றாக்குறை இப்போது 4.1 சதவீதமாக உள்ளது. இதை நடப்பு நிதியாண்டில் 3.9 சதவீதமாகக் குறைக்கும் வகையில் இலக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த இலக்கு 3.6 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது வளர்ச்சியைப் பாதிக்கக் கூடாது என்பதால் இலக்கு மாற்றப்பட்டுள்ளது.

14-ஆவது நிதிக்குழு வரி வருவாயில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மாநிலங்களின் முக்கியத்துவத்தையும் அதிகரித்துள்ளது.

அரசு முதலீடு செய்ய வேண்டும்: அரசு, தனியார் ஒத்துழைப்புத் திட்டங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளன. இப்போதைய நிலையில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக ரயில்வே துறையில் அரசு அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். ரயில்வே துறையில் அதிக முதலீடு செய்வதால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.

உரங்கள், எரிவாயு உருளைகள், கெரசின் போன்றவற்றுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்தில் ஏழைகள் பயன்பெறுவது மிகக் குறைவே. ஏழைகள் மட்டும் மானியம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ரயில்வே, சாலைக் கட்டமைப்பு போன்றவற்றில் மத்திய அரசு அதிகளவில் முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

சென்னை பொருளாதார கல்வி மையத்தின் தலைவர் சி.ரங்கராஜன், அந்த மையத்தின் இயக்குநர் கே.ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

-http://www.dinamani.com

TAGS: