20 தமிழர் படுகொலை: ஆந்திரா போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

andhra-police

ஹைதராபாத்: 20 தமிழர் படுகொலை விவகாரத்தில் ஆந்திரா காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஆந்திரா போலீசார் மீது ஏன் ஐ.பி.சி. 302வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது. திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் 20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிக் கோரி மக்கள் உரிமைகள் குழு சார்பில் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஆந்திர மாநில காவல்துறை தலைவர் ராமுடு 16 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை இன்று காலை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் சிங் குப்தா, காவல்துறை தலைவரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நிராகரித்தார்.

மேலும் இந்த என்கவுண்ட்டர் சம்பவம் இரண்டு மாநிலங்கள் தொடர்புடைய பிரச்சனை என்பதால், உள்ளுர் காவல்துறை விசாரணையை எப்படி ஏற்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் நடைபெற்றது. அப்போது, 20 தமிழரை சுட்டுப் படுகொலை செய்த போலீசார் பெயர்களைக் குறிப்பிட்டு ஏன் ஐ.பி.சி. 302வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அந்த போலீசார் அனைவர் மீதும் ஆந்திரா மாநில அரசு உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கல்யான்சிங் குப்தா அதிரடியாக உத்தரவிட்டார். அத்துடன் வரும் திங்களன்று இந்த வழக்கில் கூடுதல் விவரங்களை ஆந்திரா அரசு தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: