புவனேஸ்வர்: புவனேஸ்வரில் மனைவிக்கு மருந்து வாங்க வழியறியாத ஒரு குடும்பத்தலைவன் தங்களது 2 மாத ஆண் குழந்தையை 700 ரூபாய் ரொக்கப் பணத்துக்கும், 50 கிலோ அரிசிக்கும் விற்ற கொடுமை சமூக ஆர்வலர்களின் புருவங்களை உயரச் செய்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகுரா முதுலி. இவரது மனைவி துமுசி முதுலி. சமீப காலமாக நோய்வாய்ப்பட்ட மனைவியின் மருத்துவ செலவுகளை சமாளிக்க வழியறியாத இவர் தங்களது 2 மாத ஆண் குழந்தையை 700 ரூபாய் ரொக்கப் பணத்துக்கும், 50 கிலோ அரிசிக்கும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் விற்றுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட குழந்தைகள் நல வாரிய தலைவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில் மேற்கண்ட தம்பதியருக்கு வறுமை ஒழிப்பு திட்டம், இந்திரா அவாஸ் யோஜனா திட்டம், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட மத்திய, மாநில அரசின் எவ்வித உதவியும் கிடைத்ததில்லை என தெரியவந்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சுகுரா முதுலி-துமுசி முதுலி தம்பதியருக்கு இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் ஒரு வீடும், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் இதர சிறப்பு சலுகைகளும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தற்போதைய நிலையில், இவர்களால் குழந்தையை சரியாக வளர்த்து பராமரிக்க முடியாது என்பதால் தொண்டு நிறுவனத்திலேயே சில காலம் அந்த ஆண் குழந்தை வளரலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே ஒடிஷாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வறுமைக்காக குழந்தைகளை ரூ10-க்கும் ரூ20-க்கும் விற்பனை செய்த கொடுமை அரங்கேறி இந்தியாவை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.