நாதியற்ற தமிழன்! – பழ. நெடுமாறன்

nedumaranதிருப்பதி காட்டில் செம்மரங்களை வெட்டுவதற்கு முயன்றார்கள் என்றக் குற்றச்சாட்டின் அடிப்படையில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படுகொலையை மோதல் சாவு என வழக்கம்போல திசை திருப்ப ஆந்திர காவல் துறை முயற்சி செய்கிறது. படுகொலையை நியாயப்படுத்தி செய்தியாளர்கள் கூட்டத்தில் ஆந்திர காவல் துறைத் தலைவர் பேசியபோது குறுக்குக் கேள்விகளை எழுப்பிய செய்தியாளர்கள் மீது எரிந்து விழுந்திருக்கிறார்.

அதிரடிப்படையின் மீது தாக்குதலில் ஈடுபட்டதால்தான் தமிழகத் தொழிலாளிகளைச் சுட்டுக் கொன்றதாகவும் இது முடிவு அல்ல ஆரம்பம் என ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் கோபாலகிருஷ்ண ரெட்டி செய்தியாளர்களிடம் ஈவு இரக்கம் இல்லாமல் கூறியிருக்கிறார்.

ஆனால், கொல்லப்பட்டவர்களின் உடல்களை பிணப் பரிசோதனை செய்தபோது அவர்கள் மிக அருகில் இருந்து சுடப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

அப்படியானால் அவர்கள் கட்டி வைத்துச் சுடப்பட்டிருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. தப்பி ஓடும்போது சுடப்பட்டிருந்தால் முதுகு, கால் அல்லது பின்புறங்களில் குண்டடிப்பட்டிருக்கும். ஆனால், அத்தனை பேரும் மார்பில் குண்டடிப்பட்டு இறந்திருக்கிறார்கள்.

இறந்து போனவர்களில் முனுசாமி உள்பட 8 பேர் திருப்பதியில் இருந்து திருத்தணிக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தபோது, அதை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட ஆந்திர காவலர்கள் இந்த 8 பேரையும் சந்தேகத்தின் பேரில் கீழே இறக்கி விசாரித்தபோது அவர்களிடமிருந்து தப்பிய சேகர் என்பவர் சொந்த ஊருக்கு வந்து விவரத்தைக் கூறியபோதுதான் உண்மை வெளிவந்தது.

இந்த ஏழு பேரையும் காவல் துறை கைது செய்து காட்டிற்குள் கொண்டு போய் சுட்டுக் கொன்றிருக்கிறது. கொலை செய்யப்படுவதற்கு முன்பாக இவர்கள் கடுமையாகச் சித்திரவதைச் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை இவர்களின் உடல்களில் உள்ள வெட்டுக் காயங்கள் அம்பலப்படுத்தி

யுள்ளன.

2011-ஆம் ஆண்டு முதல் தமிழகத் தொழிலாளிகள் இந்த வனப் பகுதியில் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். சுமார் 2,000 தமிழர்கள் மரக் கடத்தல்காரர்கள் என முத்திரைக் குத்தப்பட்டு நெல்லூர், சித்தூர், கடப்பா மாவட்டங்களில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலோர் இரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலிருந்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் மீது கொலை வழக்கு உள்பட பல கொடுமையான சட்டங்களின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, சித்தேரி மலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் வாழும் பழங்குடியினரைக் குறிவைத்து ஆசைகாட்டி சமூக விரோத கும்பல் அவர்களை அணுகி கூலித் தொழிலாளிகளாக மரம் வெட்டுத் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது.

இந்த மக்களுக்கு முன்கடன் கொடுப்பதுடன், குறிப்பிட்ட அளவு மரத்தை வெட்டுவதற்கேற்ற கூலி கொடுக்கப்படும், கை நிறைய பணத்துடன் வீடு திரும்பலாம் என ஆசைகாட்டி அழைத்துச் செல்கிறது இக்கும்பல்.

செம்மரங்களைக் கடத்தி சென்னைத் துறைமுகத்திற்குக் கொண்டு வந்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடி கோடியாகப் பணம் புரட்டும் கும்பலின் தலைவர்கள் யார், அவர்களுக்குப் பின்னணியில் இருந்து உதவும் அரசியல்வாதிகள் யார் என்பதெல்லாம் காவல் துறைக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

இந்தக் கும்பலையும் அதனுடைய தலைவர்களையும் கைது செய்யாமல் கூலிக்கு மரம் வெட்டுபவர்களைக் கொன்று குவிப்பதன் மூலம் உண்மைகளை மறைக்க முயற்சி நடக்கிறது. தமிழர்கள் நாதியற்றவர்கள் என்பதால் அவர்கள் படுகொலைகளுக்கு ஆளாகிறார்கள்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறுவர்களையும், சிறுமியர்களையும் கடத்திச் சென்று பிற மாநிலங்களில் விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த சிலர் பிடிபட்டிருக்கிறார்கள். 20 ஆண்டு காலமாக இவர்கள் இந்தக் கொடுமையான தொழிலைச் செய்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மையும் அண்மையில் வெளிப்பட்டிருக்கிறது. கடத்தப்படும் சிறுவர்கள் திருட்டுத் தொழிலிலும் சிறுமிகள் விபசாரத் தொழிலிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

உன் கண்ணில் நீர் வடிந்தால் –

என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி

– என பாரதி நெஞ்சம் நெகிழப் பாடினான்.

10 மாதம் சுமந்து எவ்வளவோ துன்பங்களுக்கிடையே குழந்தைகளைப் பெற்று கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த எத்தனை ஆயிரம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பறிகொடுத்தபோது எப்படித் துடிதுடித்திருப்பார்கள்? அதே ஏக்கத்திலேயே பலர் மாண்டிருப்பார்கள்.

ஆனால், இதற்குக் காரணமான கொடியவர்கள் 20 ஆண்டு காலமாக இந்தக் குழந்தைகளைக் கடத்தும் தொழிலைத் தங்குதடையின்றி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்குப் பின்னணியில் இருந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அச்சமின்றி இன்னமும் நாட்டில் நடமாடுகிறார்கள். காரணம் தமிழன் நாதியற்றவன் என்பதுதான்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சேரி மும்பையில் உள்ள தாராவி சேரிதான். இங்குதான் இலட்சக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் சாக்கடையோரங்களில் பொத்தல் குடிசைகளில் வாழ்கின்றனர். தமிழகத்தில் வாழவழியின்றி பிழைப்புத் தேடி மும்பை சென்று கிடைத்த வேலையைச் செய்து அரைவயிற்றுக் கஞ்சி குடிக்கும் தமிழர்கள் அவர்கள். ஏனென்றால் அவர்கள் நாதியற்றவர்கள்.

ஆமதாபாத் நகரில் தானிய மண்டிகளில் லாரிகளில் இருந்து மூட்டைகளை முதுகில் சுமந்து மண்டிகளுக்குச் சென்று அடுக்குவது, மண்டிகளில் இருந்து லாரிகளுக்கு மூட்டைகளைக் கொண்டுவரும் தொழில் செய்பவர்களை நான் நேரில் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனேன். காரணம் சுமக்க முடியாத மூட்டைகளை தங்கள் முதுகில் சுமப்பவர்கள் தாய்மார்கள். அதிலும் தமிழச்சிகள். காரணம் தமிழினம் நாதியற்ற இனம் என்பதுதான்.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழகத்திலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் ஆசை வார்த்தைகளுக்கு இரையாகி இலங்கை, மியான்மர், மலேசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல தீவுகளுக்கு தோட்ட வேலைகளுக்காக மந்தை மந்தையாக ஓட்டிச் செல்லப்பட்டனர்.

ஆங்கிலேயர் தமது குடியேற்ற நாடுகளில் இரப்பர், தேயிலை, காபி போன்ற பணப் பயிர் தோட்டங்களை அமைப்பதற்காக தமிழர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டு சக்கையாக அவர்கள் வீசியெறியப்பட்டார்கள்.

இலங்கையில் இரப்பர், தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி அந்நாட்டின் தேசிய வருமானத்தில் 60 சதவீதத்தை தங்கள் உழைப்பினால் அள்ளித்தந்த தமிழர்களின் குடியுரிமையும் வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 5 இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட்டார்கள். ஏனென்றால், தமிழர்கள் நாதியற்றவர்கள்.

மியான்மரில் மிகச்செழிப்பான பகுதியாக இன்று விளங்கும் ஐராவதி சமவெளிப் பகுதி சதுப்பு நிலமாக புல்லும் புதரும் மண்டிக் கிடந்தது. அப்பகுதியை வெட்டித் திருத்த 10 இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

அவர்களுடைய உழைப்பினால் ஐராவதி சமவெளிப் பகுதி உலகில் அதிக நெல் விளைச்சல் உள்ள நிலமாக மாறியது. ஆனால், இதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தார்கள். ஏனெனில், தமிழன் நாதியற்றவன்.

இராசேந்திர சோழன் காலத்தில் மலேசியாவில் உள்ள கடாரம் என்ற பகுதியை அவன் கைப்பற்றினான் என வரலாறு கூறுகிறது. ஆனால், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதே இராசேந்திர சோழனின் வழிவந்த தமிழர்கள் அந்நாட்டிற்கு தோட்டத் தொழிலாளர்களாக கப்பல் கப்பலாக ஏற்றிச் செல்லப்பட்டார்கள். இரப்பர், தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி மலேசியாவை வளம் கொழிக்கச் செய்தார்கள்.

ஆனால், 2-ஆம் உலகப் போரின்போது அந்நாட்டைக் கைப்பற்றிய ஜப்பானியர் அங்கிருந்து பர்மா வரை மலைக் காடுகளின் வழியே இரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டபோது ஆயிரக்கணக்கான மலேசியத் தமிழர்களைக் கைதிகளாக்கி இரயில் பாதையை அமைக்கும் கொடுமையான பணியில் ஈடுபடுத்தினார்கள்.

காட்டு மிருகங்களுக்கும் மலைப் பாம்புகளுக்கும், மலேரியா காய்ச்சலுக்கும் இரையாகி ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டார்கள். எனவே, இப் பாதை மரண இரயில் பாதை என வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. காரணம் தமிழன் நாதியற்றவன்.

2009-ஆம் ஆண்டில் இலங்கையில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் சிங்கள இராணுவ வெறியர்களால் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது. அதைத் தடுத்து அவர்களைக் காப்பாற்ற இந்தியா உள்பட உலகில் எந்த நாடும் முன்வரவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் நெட்டை மரங்களைப் போல நின்று பெட்டைப் புலம்பல் புலம்பினோம்.

ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள

பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய

தமிழச் சாதி, தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்

வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ்

செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்

பிணிகளாற் சாதலும் பெருந்தொலை

யுள்ளதம்

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்

இஃதெலாம் கேட்டு என துளம்

அழிந்திலேன்

என பாரதிப் புலவன் கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்பு பாடினான். அயல்நாடுகளுக்கு பிழைக்கப் போன தமிழர்களுக்கு நேரிட்ட துன்பங்களைக் குறித்து மனம் பொறாது பாடினான். ஆனால் இன்று இந்திய நாட்டிலேயே தமிழர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்து மனம் நொந்து பாடுவதற்கு நல்ல வேளையாக பாரதி இல்லை.

-http://www.sankathi24.com

TAGS: