தடயங்களை அழிக்கும் முன் தமிழக அரசு விசாரணை நடத்தாது ஏன்?: பழ.நெடுமாறன் கேள்வி

nedumaran11ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், தடயங்களை அழிக்கும் முன்னர் தமிழக அரசு அமைச்சர், அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தாது ஏன்? என பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கோவையில் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திர காவல் துறை படுகொலை செய்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மரம் வெட்டும் கூலித்தொழிலாளர்களே தவிர, மரத்தை வெட்டி கடத்துபவர்கள் அல்ல. அப்பாவி தொழிலாளர்களை பயன்படுத்தி மரத்தை வெட்டி, கடத்தி, அதை கப்பலில் அனுப்பி, கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக ரூ.500, ரூ.1000 கூலிக்காக மரம் வெட்டுபவர்களை சுட்டுக்கொன்றது என்பது ஏற்கத்தக்கதல்ல.

ஆனால், மரங்களை வெட்டி, கடத்தும் கும்பலை கைது செய்ய இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மரம் வெட்டும் கூலித்தொழிலாளர்களை கைது செய்து விசாரித்திருந்து, இதன் பின்னணியில் உள்ள அந்த திமிங்கலங்களை கைது செய்ய இவர்கள் தயாராக இல்லை. ஏனென்றால் அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூக விரோதிகள் மூன்று பேர் சேர்ந்து பல ஆண்டு காலமாக இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது ஆந்திர அரசுக்கும் தெரியும். தமிழக அரசுக்கும் தெரியும். இவர்களுக்கு உரிய பங்கு போகிறது. ஏதாவது செய்து காட்ட வேண்டும் என்பதற்காக இந்த படுகொலையை நடத்தியுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதன் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

ஆந்திராவில் நம் தொழிலாளர்கள் சுடப்பட்ட தகவல் கிடைத்த உடன், டி.ஜி.பி. மற்றும் அமைச்சர் ஒருவரை ஆந்திராவுக்கு அனுப்பியிருக்க வேண்டும். தடயங்களை அழிக்கும் முன்னர் அவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்திருக்க வேண்டும். அதேபோல் மருத்துவக்குழுவை அனுப்பி, அவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இதில் தமிழக அரசு தவறி விட்டது.

இது மர்மமான கொலை. இதற்கு இழப்பீடாக ரூ.3 லட்சத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது இது போதாது. இதற்கு தமிழக அரசு ரூ.10 லட்சமும், ஆந்திராவிடம் இருந்து இழப்பீடாக ரூ.10 லட்சமும் பெற்று. இறந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை கொலை வழக்காக பதிவு செய்ய ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இந்த வழக்குகளில் எல்லாம் தன்னையும் இணைக்க மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் ஆந்திர சிறைகளில் ஆயிரக்கணக்கான் தொழிலாளர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பட்டியல், அவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆகியவற்றை கேட்டுப்பெற வேண்டும். தர மறுத்தால், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அந்த விவரங்களை பெற்று, அதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: