நதிகள் இணைப்பை விரைவுபடுத்த பணிக் குழு

நதிகள் இணைப்பை விரைவுபடுத்தும் விதத்தில், மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக மத்தியப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் பி.என்.நவலவாலா தலைமையில் சிறப்புப் பணிக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

இதுகுறித்து மத்திய நீர்வளத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

நதிகள் இணைப்பு தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அமலாக்கத் திட்டங்களைத் தயாரிப்பதற்காகவும், அதற்கான நிதி சார்ந்த திட்டங்களை பரிந்துரைப்பதற்காகவும் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட இணைப்புத் திட்டங்களை ஆராய்வதுடன், தற்போதைய திட்டத்தின் சாத்தியமற்ற இணைப்புகளுக்கு மாற்றுத் திட்டங்களையும் இந்தக் குழு பரிசீலிக்கும். மேலும், ஒவ்வொரு நதிநீர் இணைப்புத் திட்டம் தொடர்பான பொருளாதார சாத்தியக்கூறு, சமூகப் பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்புகள், அப்பகுதியில் உள்ளவர்களை வேறு பகுதியில் குடியேற்றுவது ஆகியவை குறித்த மதிப்பீட்டு நெறிகளையும் பணிக்குழு உருவாக்கும்.

நதிகள் இணைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை இந்தக் குழு ஏற்படுத்தும். நதிகள் இணைப்பு தொடர்பான உரிய வரைவுத்திட்டத்தையும் அளிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கேன், பேத்வா நதிகளை இணைக்கும் திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கேன் நதியில் மிகுதியாக ஓடும் நீர், குறைந்த அளவில் நீர் ஓடும் பேத்வா நதியுடன் கால்வாய் வழியாக இணைக்கப்படும். இதனால், மத்தியப் பிரதேசமும், உத்தரப் பிரதேசமும் பயனடையும்.

நதிகள் இணைப்பின் மூலம், குடிநீர் விநியோகம், மீன்வளம், மாசுக் கட்டுப்பாடு போன்ற நன்மைகள் ஏற்படுவதுடன், 3.5 கோடி ஏக்கர் நிலங்களுக்கான நீர்ப்பிடிப்புத் திறனும், கூடுதலாக 34,000 மெகாவாட் நீர் மின்சார உற்பத்தியும் கிடைக்கும் என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

நதிகள் இணைப்பு தொடர்பான கோரிக்கை, கடந்த 1980களில் இருந்து எழுந்து வருகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இதற்கான பணிகளைத் தொடக்கியது.

எனினும், இந்தத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், நதிகளை இணைக்கும் திட்டம் முடங்கியது.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நதிகள் இணைப்புத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு உத்தரவிட்டது. எனினும், இது தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகின.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதும் நதிகள் இனைப்புக்கான பணிகள் மீண்டும் தொடங்கின.

இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்காக, கடந்த ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது.

-http://www.dinamani.com

TAGS: