நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும்

நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என அவரது பேரன் சூர்ய குமார் போஸ், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

தற்போது, ஜெர்மனியில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடியை, அந்நாட்டின் பெர்லின் நகரில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசியபோது சூர்ய குமார் போஸ் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் விஜய் கோஹலே சார்பில் பெர்லின் நகரில் மோடிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, ஹம்பர்க் நகர ஜெர்மன் – இந்திய கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் நேதாஜியின் பேரன் சூர்ய குமார் போஸூக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பிரதமர் நரேந்திர மோடியை தனியே சந்தித்துப் பேசினார். பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் சூர்ய குமார் போஸ் கூறியதாவது:

நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.

அதற்கு, இந்த விவகாரத்தில் உரிய முறையில் தீர்வு காண்பதாக அவர் உறுதியளித்தார். “உண்மை வெளிவர வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்றும் மோடி கூறினார். நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களை, நேரு தலைமையிலான அப்போதைய அரசு வேவு பார்த்தது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு உண்மையை வெளிக்கொணர வேண்டும். இதுகுறித்து விசாரணை ஆணையம் மூலம் விசாரணை நடத்த வேண்டும்.

இந்திய விடுதலைக்கு அஹிம்சைப் போராட்டம் மட்டும்தான் காரணம் என பிரசாரம் செய்வதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். நேதாஜியின் பங்கு இல்லாமல் இந்தியா விடுதலை அடைந்திருக்க முடியாது. நேதாஜி அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவும் அவரது குடும்பமாகும்.

எனவே, அவர் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடக் கூறுவது எங்களுக்கு மட்டுமே உள்ள கடமையல்ல. இதற்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றார் சூர்ய குமார் போஸ்.

-http://www.dinamani.com

TAGS: