1917ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரஷியாவின் “குலாக்’ முகாம்கள் (கட்டாயத் தொழிலாளர் முகாம்) தொடர்பாக அந்நாட்டு உளவுத் துறைகள் அளித்த அறிக்கைகளும் அதில் அடங்கும். குலாக் முகாமில்தான், இந்தியாவின் சுதந்திரத்துக்காக “இந்திய தேசிய ராணுவம்’ (ஐஎன்ஏ) என்னும் படைப்பிரிவை உருவாக்கி போரிட்ட நேதாஜி, பிற போர்க் கைதிகள், அரசியல் அதிருப்தியாளர்களுடன் சிறை வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சோவியத் குடியரசின் (தற்போது ரஷியா) முன்னாள் உளவாளியும், 1934ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு ரகசியப் பயிற்சி அளித்தவரும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, குலாக் முகாமில் பணியாற்றியவருமான குஸ்லோவ், யாகூட்ஸ்க் சிறையில் 45ஆம் எண் சிறையில் நேதாஜி அடைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் 1930ஆம் ஆண்டுகளில் சோவியத்தின் உளவாளியாக செயல்பட்ட குஸ்லோவ், நேதாஜியை நன்கு அறிந்தவர். கொல்கத்தாவில் நேதாஜியை அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இதேபோல், சோவியத்தின் மற்றொரு உளவாளியும், சைபீரியா சிறைக் கைதியாக இருந்தவருமான கார்ல் லியோனார்டும், சைபீரியச் சிறையில் நேதாஜி அடைக்கப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தினார். ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அரசு, அத்தகவலை நிராகரித்து விட்டது. அமெரிக்காவின் பொய்ப் பிரசாரம் அது என நேரு அரசு தெரிவித்து விட்டது.
எனினும், இதுகுறித்து நேருவின் முன்னாள் உதவியாளரான டாக்டர் சத்ய நாராயண் சின்ஹா கூறுகையில், “ஜெர்மனியில் இருந்து ஜெனரல் ஸ்டூவர்ட், மேஜர் வாரன் ஆகியோர் 1946ஆம் ஆண்டு அனுப்பிய குறிப்புகளில், நேதாஜி சாகவில்லை; அவர், ரஷியர்களால் துன்புறுத்தப்பட்டு வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது’ என்றார்.
கேஜிபி, ஜிஆர்யூ, சேகா, என்கேவிடி, ஸ்மெர்ஷ், எம்.ஜி.பி. ஆகிய உளவு அமைப்புகளிடம் இருந்த மிகவும் ரகசியமான ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான முடிவு, உக்ரைன் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது. 1918ஆம் ஆண்டில், “பதிவு இயக்குநரகம்’ என்ற பெயரில் ஜிஆர்யூ உளவு அமைப்பு உருவாக்கப்பட்டது. 1942ஆம் ஆண்டு, அதன் பெயர் ஜிஆர்யூ என மாற்றப்பட்டது. 1943ஆம் ஆண்டு, ரஷியாவின் அப்போதைய அதிபர் ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது ஸ்மெர்ஷ். சோவியத் யூனியன் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தை கவனிக்க 1954ஆம் ஆண்டில் கேஜிபி உளவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
1991ஆம் ஆண்டில், உக்ரைன் விடுதலை பெற்றதைத் தொடர்ந்து அந்த ஆவணங்கள் அனைத்தும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.
அந்த ரகசிய ஆவணங்களை இணையதள வலைதளப் பக்கத்தில் வெளியிட உக்ரைன் அரசு திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு வெளியிட்டால் குலாக் முகாமில் இருந்த கைதிகள் குறித்தும், அவர்கள் மாயமானது குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும்.
சைபீரியாவில் குலாக் முகாம்களில் இருந்த கைதிகள் அனைவரும், நிலக்கரிச் சுரங்கப் பணிகளிலும், சாலைகள், அணைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு முகாமிலும், 500 முதல் 1,000 கைதிகள் இருந்ததாகவும், உலகிலேயே கடும் குளிர் நிறைந்த பகுதியான சைபீரியாவில் சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டபோது, அவர்களில் பெரும்பாலானோர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக இந்திய தேசிய ராணுவம் என்னும் படையை உருவாக்கிப் போரிட்டவர் நேதாஜி. 2ஆம் உலகப் போரின்போது அவர் சென்ற விமானம் தைவானில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நேதாஜி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேதாஜியின் ஆதரவாளர்கள் இதை நம்பாததால் சர்ச்சை நீடிக்கிறது. ரஷியாவின் சைபீரியா சிறையில் நேதாஜி துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சிலரும், இந்தியாவின் வடமாநிலங்களில் துறவி போன்று நேதாஜி வாழ்ந்து மறைந்ததாக சிலரும் தெரிவித்து வருகின்றனர்.
உக்ரைன் நாடாளுமன்றம் எடுத்த முடிவுப்படி, குலாக் முகாம்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டால், நேதாஜி தொடர்பான நமது சந்தேகங்கள் அனைத்துக்கும் விடை கிடைத்து விடும்.
மேலும் பல ஆவணங்களை வெளியிட அரசு நடவடிக்கை?
நேதாஜி தொடர்பான ஆவணங்கள் குறித்த செய்தியை எக்ஸ்பிரஸ் நாளிதழ் கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட பிறகு, மத்திய உள்துறை அமைச்சகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும், மேலும் பல ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான திட்டத்தை வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
நேதாஜி தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திடம் 29 ரகசிய ஆவணங்களும், பிரதமர் அலுவலகத்திடம் 60 ஆவணங்களும் உள்ளன.
-http://www.dinamani.com
நன்றி கெட்ட ஜென்மங்கள் நிறைந்த கட்சி காங்கிரஸ் என்பதை இப்பவாவது உணருங்கள். இந்திய நாட்டின் சுதந்திரத்திக்குப் போரிட்டவருக்கு சைபீரியாவில் அடிமைத் தண்டனை. சகல வசதிகளுடன் பல்லக்கில் வலம் வந்த நேருஜி-க்கு No. 10, Janpath-தில் பஞ்சு மெத்தை தூக்கம். உண்மை வெளிவரும் பொழுது, அது நேருவாகவே இருந்தால் காலில் உள்ளதை கழற்றி ஏறிய வேண்டும்.