ஊழல் நாடல்ல, திறன் மிகு நாடு

  • டொரான்டோவில் இந்தியா வம்சாவளியினர் இடையே உரையாற்ற வந்த பிரதமர் நரேந்திர மோடி. உடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்.

    டொரான்டோவில் இந்தியா வம்சாவளியினர் இடையே உரையாற்ற வந்த பிரதமர் நரேந்திர மோடி. உடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்.

“முந்தைய அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட ஊழல் நாடு என்ற தோற்றத்தை மாற்றி, திறன்மிகு நாடாக இந்தியாவை உருவாக்கி வருகிறோம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கனடாவின் டொரான்டோ நகரில், அந்நாட்டில் வாழும் இந்தியர்களிடையே அவர் வியாழக்கிழமை உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர். அப்போது மோடி பேசியதாவது:

தீவிர உற்சாகத்துடன் அன்பு காட்டிய கனடாவுக்கும் அதன் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நீண்ட காலத்துக்குத் தொடரும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நம்பகமான சூழல்: இந்தியாவில் தற்போது நம்பகமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மனதில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் வளர்ச்சி ஒன்றே தீர்வாகும். தனக்குத் தேவையான அனைத்து திறன்களையும் நம் நாடு பெற்றிருக்கிறது. தற்போது அதற்கு வாய்ப்புகள்தான் தேவை. சாலை மேம்பாடு உள்பட உள்கட்டமைப்பு வசதிகள் மீது எனது அரசு கவனம் செலுத்தி வருகிறது.

நாட்டில் குழப்பம் நிறைந்த சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பியவர்கள் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி) அதைச் செய்தனர். அவர்கள் சென்று விட்டனர். அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலையை சுத்தப்படுத்தும் வேலையை நாம் மேற்கொள்வோம்.

உலக வளர்ச்சிக்குத் தேவையான பணியாளர்களை இந்தியா வழங்கும். “திறன்மிகு இந்தியா’ என்பதுதான் நமது இலக்கே தவிர, “ஊழல் மிகுந்த இந்தியா’ அல்ல. நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் என்னால் ஏற்படவில்லை. அவை இந்திய மக்களால் ஏற்பட்டு வருகின்றன.

மக்களின் மனநிலையில் மாற்றம்: பத்து மாதங்களுக்கு முன் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

தற்போது மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய செல்வம் அதன் இளைஞர்கள்தான். அவர்களை வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாகப் பார்க்க விரும்புகிறேன்.

நாட்டில் 80 கோடி இளம் மக்கள்தொகை இருக்கிறது. 80 கோடி கனவுகளும், 160 கோடி வலுவான கரங்களும் இருக்கின்றன. நம்மால் சாதிக்க முடியாதது என்ன?

தூய்மை இந்தியா திட்டத்தைப் பொருத்தவரை, இது அரசு மட்டுமே மேற்கொள்ளும் திட்டமல்ல. மக்களும் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக்கும் திட்டங்களோடு முன்வருகிறார்கள். இது, நாட்டு மக்களின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கான அறிகுறியாகும். பள்ளிகளில் குறிப்பாக சிறுமிகளுக்காக கழிப்பறைகளைக் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவுக்கு அணுசக்தி அவசியம்: மகாத்மா காந்தியும் கௌதம புத்தரும் வாழ்ந்த நாடான இந்தியாவுக்கு அமைதி, சமாதானம் ஆகியவற்றில் நீண்ட நெடிய வரலாறு உண்டு.

அப்படியிருந்தும் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆக்கப்பூர்வமான மின் உற்பத்திக்கான அணு உலைக் கலன்களை அளிக்க மறுத்தது வருத்தமளித்தது.

புவி வெப்பமயமாதல் குறித்தும் பருவநிலை மாற்றம் குறித்தும் உலகமே கவலைப்படுகிறது. குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து இப்பிரச்னை குறித்து விவாதிக்கிறார்கள்.

ஆனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, தூய்மையான எரிசக்தியை உற்பத்தி செய்வதில் இந்தியா வெற்றி பெற்றால், உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னையைத் தீர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர் என்ற நிலை தோன்றும். அதற்கு, அணு மின்சக்தி அவசியம்.

எனது இந்த மூன்று நாடுகள் பயணத்தில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய முடிவாக, அணுசக்தித்துறை தொடர்பாக பிரான்ஸில் எடுக்கப்பட்ட முடிவைக் கூறலாம். இந்தியாவில் அணு உலைகளை அமைப்பது என்று அங்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு யுரேனியம் தேவைப்படுகிறது. அதை கனடா வழங்கும்.

கடந்த காலங்களில் அணு உலைகளை வழங்குமாறு பல்வேறு நாடுகளையும் இந்தியா கோரி வந்தது. அந்த நாடுகள் அதை ஏற்காமல் கைவிரித்து விடும்.

இந்தியா அணுகுண்டைத் தயாரித்து விடும் என்று அந்த நாடுகள் அஞ்சின. ஆனால், அணுகுண்டு தயாரிப்பவர்களை யாரும் தடுப்பதில்லை.

நான் குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து கனடாவுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல அனுபவமாக இருந்து வருகிறது.

இந்தியாவும் கனடாவும் இணைந்து பணியாற்றுவது இந்த நாடுகளை பெரும் சக்திகளாக உருவெடுக்கச் செய்யும் என்றார் மோடி.

முன்னதாக இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியத்தை வழங்க கனடா புதன்கிழமை ஒப்புக் கொண்டது. ரஷியா, கஜகஸ்தானைத் தொடர்ந்து இந்தியாவுக்கு யுரேனியத்தை வழங்க உள்ள மூன்றாவது நாடு கனடாவாகும்.

-http://www.dinamani.com

TAGS: