கடந்த 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீனப் போர் குறித்த ஹெண்டர்சன் புரூக்ஸ் அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சுப்ரமணியம் சுவாமி சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய-சீனப் போர் குறித்த ஹெண்டர்சன் புரூக்ஸ் அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று பாரிக்கர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவின் பாதுகாப்பு அணுகுமுறை, தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சந்திக்கத் தேவையான ஆயுதக் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன.
ராணுவ வீரர்களுக்கான “ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம்’ திட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும் என்றும் சுவாமியிடம் பாரிக்கர் உறுதியளித்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க வேண்டாம் என்று சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் கோரியிருந்தார். அதற்கு சில நாள்களுக்குப் பிறகு அவர் பாதுகாப்புத் துறை அமைச்சரைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னணி: சீனாவுடனான போரில் இந்தியா தோல்வியடைந்த பிறகு, அப்போர் தொடர்பாக இந்திய ராணுவத்தின் அப்போதைய உயர் அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ஹெண்டர்சன் புரூக்ஸூம், பிரிகேடியர் பி.எஸ்.பகத்தும் தயாரித்தனர். அரசிடம் உள்ள ரகசிய ஆவணமான இதை வெளியிட வேண்டும் என்று கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சியான பாஜக கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com