ஆந்திர வனப் பகுதியில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன என்ற உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.
மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் திங்கள்கிழமை காலையில் தொடங்கியது. அப்போது, மக்களவை அதிமுக குழுத் தலைவர் பி. வேணுகோபால் எழுந்து “ஆந்திர வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களில் ஏழு பேரின் கழுத்துப் பகுதியில் காயங்கள் காணப்பட்டுள்ளன. சிலரின் உடல் பகுதிகள் தீயில் கருகிய நிலையில் இருந்தன. அச்சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? என்ற உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்’ என வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க நோட்டீஸ் அளித்துள்ளேன். அதை ஏற்க வேண்டும் என மக்களவைத் தலைவரை கேட்டுக் கொண்டார். ஆனால், ஆந்திர சம்பவம் மாநில விவகாரம் என்று கூறி வேணுகோபாலின் கோரிக்யையை சுமித்ரா மகாஜன் ஏற்க மறுத்தார்.
அப்போது, குறுக்கிட்ட அதிமுகவைச் சேர்ந்த மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை “இது இரு மாநிலங்கள் தொடர்புடைய பிரச்னை. எனவே, இதை அவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார். இருப்பினும் அவையில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி மற்ற எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.
பின்னர் பிற்பகலில் தம்பிதுரை தலைமையில் மக்களவை கூடியதும், ஆந்திர விவகாரத்தை வேணுகோபால் பேசியதாவது: “செம்மரக்கடத்தல் தடுப்புப் படையினர் என்ற பெயரில் சேஷாசலம் வனப் பகுதியின் இரு வேறு இடங்களில் இருந்து புறப்பட்டவர்கள் சுமார் 100 பேரை மரம் கடத்தியதாகக் கூறி சுட்டுக் கொன்றுள்ளனர். தங்களை தாக்கியதால் அனைவரையும் சுட்டுக் கொன்றதாக காவல்துறை கூறுகிறது. ஆனால், 20 தமிழர்களின் உடல்கள் மட்டும்தான் கிடைத்துள்ளன. மற்ற 80 பேரின் உடல்கள் எங்கே? அச்சம்பவத்தில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் காவல்துறையினருக்கு குறிப்பிடும்படியான காயங்கள் இல்லை. ஆந்திர காவல்துறையினர் கொடூரமாக சிலரை சுட்டுக் கொல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இரு மாநிலங்கள் தொடர்புடைய இந்த விவகாரத்தில் கடத்தலில் ஈடுபட்டவர்களை உண்மையிலேயே கைது செய்ய ஆந்திர காவல் துறையினர் விரும்பியிருந்தால் அதில் ஈடுபட்டதாகக் கூறியவர்களைக் கைது செய்யாமல் சுட்டுக் கொன்றது ஏன்?
இந்த கடத்தலுக்கு உண்மையிலேயே காரணமானவர்கள் யார்? சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இழப்பீடு வழங்கியுள்ளனர். இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் உண்மையிலேயே செம்மரங்களைக் கடத்தியவர்கள்தானா என்பதை நிரூபிக்கும்வரை அவர்கள் நிரபராதிகளாகவே கருதப்பட வேண்டும். இதில் தவறிழைத்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றார் வேணுகோபால்.
-http://www.dinamani.com


























