பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவை 3 மாநகராட்சிகளாக பிரிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாக வசதிக்காக பெங்களூரு மாநகராட்சியை மூன்றாக பிரிக்க சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதுகுறித்து விவாதிக்க, நேற்று ஒருநாள் சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது.
பேரவை கூடியதும் சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, கர்நாடகா முனிசபல் கார்பொரேசன் (சட்டத்திருத்தம்) மசோதா 2015-ஐ சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் மீது, பாஜக, மஜத மட்டுமின்றி காங்கிரஸ் உறுப்பினர்களும் வாதிட்டனர். ஆனால், இரவு 8 மணிக்கும் மேலாக விவாதம் தொடர்ந்த நிலையில், குரல் வாக்கெடுப்புக்கு மசோதாவை விட்டார் சபாநாயகர் காக்கோடு திம்மப்பா. குரல்வாக்கெடுப்பில் சட்டம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சட்டம் மேலவைக்கு சென்றுள்ளது. மேலவை வரும் வியாழக்கிழமை கூடுகிறது. அங்கு காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. எனவே, சட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அப்படியே நிறைவேறினாலும், ஆளுநர் வஜுபாய் வாலா, அனுமதிப்பதும் சந்தேகம் என்று தெரிகிறது.
முன்னதாக சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் ஜெயச்சந்திரா, “பெங்களூரு மாநகராட்சியின் மக்கள்தொகை 1 கோடியை நெருங்குவதால், நிர்வாகம் பெரும் இடையூறுக்குள்ளாகிறது. குப்பைகளை கூட அள்ளி கொட்ட மாநகராட்சி கஷ்டப்படுகிறது. வரி வருவாய் குறைந்து கொண்டே செல்கிறது. எனவே மாநகராட்சியை மூன்றாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.
ஆனால், மஜத உறுப்பினரான முன்னாள் முதல்வர் குமாரசாமி, பாஜகவின் முன்னாள் துணை முதல்வரான அசோக் உள்ளிட்டோர், பெங்களூரு மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்பட்டால், மாநகராட்சியில், கன்னடர்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள். பிற மொழி பேசும் மக்கள் (தமிழ், தெலுங்கு) பெரும்பான்மைமிக்கவர்களாக ஆகிவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்தனர்.
ஆனால், அரசோ சட்டத்தை நிறைவேற்றுவதில் குறிக்கோளாக இருந்ததால், மசோதா நகல்களை கிழித்து போட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி, வடக்கு, மத்தி, தெற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டால், மத்தி பெங்களூரு மாநகராட்சி பகுதியில், கன்னடர்களைவிடவும், தமிழர்களே பெரும்பான்மையுள்ளவர்களாக மாறுவார்கள். எனவே மேயர் உள்ளிட்ட பதவிகளும் தமிழர்களுக்கே கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆனால், இவ்வாறு மாறினால், வருங்காலங்களில் பெங்களூரை தமிழகத்துடன் இணைக்க கோரிக்கை எழும் வாய்ப்புள்ளது என்ற அச்சம், கர்நாடக எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!