விவசாயிகளின் உயிர் அனைத்திலும் மேலானது: மோடி

விவசாயிகளின் உயிரைக் காப்பதை விட மேலானது வேறு எதுவுமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார். விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண தகுந்த ஆலோசனைகளை யார் வழங்கினாலும், அதை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக மக்களவையில் அவர் மேலும் பேசியதாவது:

தில்லி பொதுக்கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டது, நாடு முழுவதும் மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்த வேதனையை மக்களவை உறுப்பினர்களும் வெளிப்படுத்தினர். எந்தத் தருணத்திலும் விவசாயிகள் தனித்து விடப்பட்டதாக உணர்ந்துவிடக் கூடாது.

விவசாயிகளின் உயிரைக் காப்பதை விட முக்கியமானது எதுவுமில்லை. அவர்களுடைய பிரச்னைகள் காலங்காலமாக வேரூன்றி உள்ளன. அது பழைமையான விஷயம். அந்தப் பிரச்னைகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து தீர்வு காண்பதுதான் தற்போது அவசியம்.

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண தகுந்த ஆலோசனைகளை யார் வழங்கினாலும், அதை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இதற்கு முந்தைய ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் என்ன தவறுகள் நிகழ்ந்தன? எந்த வகையான குறைபாடுகள் உள்ளன? என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனாலும்கூட, விவசாயிகள் தற்கொலை செய்வது நீடித்துக் கொண்டே இருக்கிறது.

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. இந்தப் பிரச்னைக்கு அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் என்றார் மோடி.

ஆம் ஆத்மியே காரணம்

விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்து கொள்ள மரத்தில் ஏறியபோது, ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கைதட்டி கோஷமிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் அவர் கூறியதாவது:

பொதுவாக, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் உள்ளவர்களிடம் பிறர் ஆதரவாகப் பேசினால், தங்களது முடிவை அவர்கள் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தில்லி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள், கஜேந்திர சிங் தற்கொலைக்கு முயன்றதைக் கண்டு கைதட்டி, கோஷங்களை எழுப்பினர்.

இந்தச் சூழலைக் கையாள துரித நடவடிக்கைகள் எடுக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார் ராஜ்நாத் சிங்.

ஆனால், விவசாயி தற்கொலை செய்ய முயன்றபோது, அதைத் தடுக்க தில்லி போலீஸார் முற்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

-http://www.dinamani.com

TAGS: