ஆந்திர சம்பவம்: நீதி விசாரணைக்கு மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதியில், செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ஆந்திரப் பிரதேச அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வுக் கூட்டம் ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு ஆணையத்தின் தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

சேஷாசல வனப்பகுதியில் 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களில், நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது சட்டப்படி அவசியம்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகக் கூறப்படும் போலீஸாரின் மருத்துவ அறிக்கைகளை, மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

சம்பவத்தின்போது நடைபெற்ற கம்பியில்லாத் தகவல் தொடர்பு குறித்த விவரங்களை அரசு வழங்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தில், வாகனங்களின் வருகை குறித்த தினசரி குறிப்புப் புத்தகம் பராமரிக்கப்பட வேண்டும்.

இந்தப் படுகொலை தொடர்பான சாட்சிகள், தங்களுடைய சாட்சியங்களை தகுந்த அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாட்டிலேயே அளிக்கலாம் என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

-http://www.dinamani.com

TAGS: